;
Athirady Tamil News

200 மணி நேர பேச்சுவார்த்தை; 300 சந்திப்புகள்: டெல்லி பிரகடனம் குறித்து அமிதாப் காந்த்!!

0

ஜி20 இரண்டு நாள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. ஜி20 அணியில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் அங்கத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் முக்கிய முடிவுகளும், எதிர்கால நோக்கங்கள் குறித்தும் ஒரு அறிக்கை கூட்டாக வெளியிடப்படுவது வழக்கம். இம்முறை இந்த வரைவறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு சிக்கல் எழுந்தது. ரஷிய உக்ரைன் போரில், ஜி20 அணியில் உறுப்பினரான சீனா, ரஷியாவை ஆதரிக்கிறது. ஆனால் மற்றொரு உறுப்பினரான அமெரிக்கா ரஷியாவை எதிர்க்கிறது. ஒரு சில உறுப்பினர் நாடுகள் இரு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகிக்கிறது.

இந்நிலையில், வரைவறிக்கை தயாரிப்பின்போது ரஷிய உக்ரைன் போர் குறித்து இடம்பெறும் கருத்துக்களால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று மாலை அனைத்து உறுப்பினர்களின் 100 சதவீத ஒப்புதலுடன் கூட்டறிக்கை தயாரானதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லி பிரகடனம் எனும் பெயரில் அந்த அறிக்கை நாடுகளுக்கிடையேயான சச்சரவுகள் குறித்து உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஏற்று கொண்டுள்ள அம்சங்களுடன் நேற்று வெளியாகியது.

இதனை தயார் செய்ய இணை செயலாளர் ஈனம் கம்பீர் மற்றும் நாகராஜ் நாயுடு ஆகியோர் பல நாட்டு பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதன் பயனாக இச்சிக்கலில் மாநாட்டின் முதல் நாளிலேயே ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டது. டெல்லி பிரகடனம் தயாரிக்கப்பட்டது குறித்து இம்மாநாட்டிற்கான இந்திய அரசாங்கத்தின் ஷெர்பா (sherpa) எனப்படும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அமிதாப் காந்த் கூறியுள்ளதாவது:- அறிக்கை தயாரிப்பில் மிகவும் சிக்கலாக இருந்தது புவிசார் அரசியல் பிரச்சனையான ரஷிய உக்ரைன் போர் குறித்து இடம்பெறும் பத்திகளும், அது சம்பந்தமான வாக்கியங்களும் உருவாக்கப்படுவதுதான்.

இதற்காக உறுப்பினர் நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் 200 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக 300க்கும் மேற்பட்ட சந்திப்புகள நடந்தன. 15-க்கும் மேற்பட்ட வரைவறிக்கைகளும் அவர்கள் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டு அதன் பிறகே இது சாத்தியமானது. இவ்வாறு அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். உலக தலைவர்களின் கூட்டறிக்கையில் “ரஷியா”, “உக்ரைன்” எனும் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு “அனைத்து நாடுகளும் பிற நாடுகளின் எல்லைக்கான உரிமைகளை மதிக்க வேண்டும்” என்பது போன்ற பொதுவான வாக்கியங்கள் அமைக்கப்பட்டு இறுதியாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.