கேரளாவில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!
வடமேற்கு வங்காள விரிகுடாவிற்கும் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவிற்கும் இடையில் நிலை பெற்றுள்ள புயல் சுழற்சி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் இன்று ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களிலும் நாளை (11-ந்தேதி) இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், மலைப்பாங்கான இடங்களில் வசிப்போரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.