இந்தியா – சீனா: ஐரோப்பாவிடம் இருந்து விலகும் ஆப்ரிக்காவை வசப்படுத்த போவது யார்?
ஜி-20 குழுவில் ஆப்பிரிக்க யூனியன் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் சனிக்கிழமை தொடங்கிய ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி இதை அறிவித்தார்.
ஜி-20 மாநாடு துவங்குவதற்கு முன்பாக நடந்த, அறிவிப்பு அறிக்கையை தயாரிக்கும் உறுப்பு நாடுகளின் ஷெர்பாக்களின் (உச்சிமாநாட்டின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்பவர்கள்) கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
55 நாடுகளின் கூட்டமைப்பான ஆப்பிரிக்க யூனியன் இந்த ஜி-20 மாநாட்டில் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றது. ‘குளோபல் சவுத்’க்கு தலைமை வகிக்கும் இந்தியாவின் லட்சியத்திற்கு இதன்மூலம் புதிய வலு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
தான் நடத்தும் ஜி-20 மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனுக்கு உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது என்ற பெருமையை இந்தியா எடுத்துக்கொள்ளலாம்.
55 ஆப்பிரிக்க நாடுகளின் அமைப்பான ஆப்பிரிக்க யூனியனை ஜி-20-ல் உறுப்பினராக்கும் இந்த முயற்சி, ‘குளோபல் சவுத்’ தலைவராக ஆவதற்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடக்கும் ஒரு போட்டியாகவும் பார்க்கப்படுகிறது.
ஆகவேதான் ஜி-20யில் ஆப்பிரிக்க யூனியனை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முதலில் எழுப்பியதாக சீனா கூறிக்கொள்கிறது. ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 இல் சேர்த்ததற்கான பெருமை தன்னைச்சாரும் என்று ரஷ்யாவும் சொல்கிறது.
இந்த கோரிக்கையை முதலில் எழுப்பிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்று ரஷ்யாவின் ஜி-20 ஷெர்பாவை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
55 ஆப்பிரிக்க நாடுகளின் அமைப்பான ஆப்பிரிக்க யூனியனை ஜி-20-ல் உறுப்பினராக்கும் இந்த முயற்சி, ‘குளோபல் சவுத்’ தலைவராக ஆவதற்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடக்கும் ஒரு போட்டியாகவும் பார்க்கப்படுகிறது.
க்ளோபல் சவுத்தின் தலைவர் யார்? இந்தியாவா, சீனாவா?
பொதுவாக இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை ‘குளோபல் சவுத்’ என்று அழைக்கப்படுகின்றன. இது புவியியல் பிரிவு அல்ல. ஏனெனில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவையும் தெற்கு அரைக்கோளத்தில் உள்ளன. ஆனால், இந்த நாடுகள் க்ளோபல் சவுத்தின் அங்கம் அல்ல.
குளோபல் சவுத் என்பது புவியியல், புவிசார் அரசியல் மற்றும் வளர்ச்சி தொடர்பான அம்சமாகும். இருப்பினும் இந்த கருத்துக்கு சில விதிவிலக்குகளும் உள்ளன என்று புது டெல்லியை தளமாகக் கொண்ட திங்க் டேங்க் கவுன்சில் ஃபார் ஸ்ட்ராடர்ஜிக் அண்ட் டிஃபென்ஸ் ரிசர்ச்சின் நிறுவனர் ஹேப்பிமோன் ஜேக்கப் கூறுகிறார்.
குளோபல் சவுத் தலைவராக ஆவதற்கு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. ஆப்பிரிக்க யூனியனை ஜி-20யில் சேர்க்கும் முயற்சிக்கான பெருமை தங்களையே சாரும் என்று இரு நாடுகளும் கூறிக்கொள்கின்றன. இந்தப்போட்டி எவ்வளவு கடுமையானது என்பது இதிலிருந்து தெரிகிறது.
குளோபல் சவுத் என்பது புவியியல், புவிசார் அரசியல் மற்றும் வளர்ச்சி தொடர்பான அம்சமாகும்.
புதிய சீனா உதயமாகிக்கொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனால் இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் வித்தியாசம் உள்ளது.
“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளடக்கியதாக உள்ளது. அதே சமயம் சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் ’பெரியது சிறியது’ என்ற உணர்வு இருந்து வருகிறது.
அணிசேரா நாடுகளின் அமைப்பு, சார்க் போன்ற அமைப்புகள் இந்தியாவின் இந்தக் கொள்கைக்கு சான்று. ஆனால் அத்தகைய அமைப்புகளில் இருந்து சீனா விலகியே இருந்தது,”என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும், சீன விவகாரங்களில் நிபுணருமான அரவிந்த் யெல்லேரி, பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
“இப்போது ‘க்ளோபல் சவுத்’ அதாவது வளரும் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு தான் தலைமை தாங்க முடியும் என்று சீனா நினைக்கும்போது, இந்தியா அதன் மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது. எனவே இந்தத்தலைமை பதவியை பெறுவதற்காக தனது கொள்கைகளை மாற்ற அது முயற்சி செய்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
சீனாவுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் இந்தியா தனது நட்புறவை அதிகரிக்கத் தொடங்கியது
ஆப்பிரிக்காவில் சீனாவுக்கு வெகுகாலம் முன்பே இந்தியா கால்பதித்து விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா அங்குள்ள வளங்களை சுரண்டுவதற்கு அல்லது அங்கு முதலீடு செய்வதற்காக மட்டுமே செல்லவில்லை. ஆனா சீனா தன் வணிக இலக்குகளுக்காக அங்கு முதலீடு செய்து வருகிறது. அங்குள்ள எரியாற்றல் ஆதாரங்களின் மீது அது கண் வைத்துள்ளது. ஆப்பிரிக்கா வழங்கக்கூடிய உலகமயமாக்கலின் பலன்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த அது விரும்புகிறது.
ஆப்பிரிக்காவில் அதிக முதலீடு செய்து வருவதால், தான்தான் ஆப்பிரிக்காவின் நல்ல நண்பன் என்று பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பும், அதற்குப்பிறகும் சீனா கூறி வருகிறது. எனவே ஆப்பிரிக்காவை ஜி-20க்குள் கொண்டு வந்த பெருமை தன்னையே சாரும் என்று அது கூறுகிறது. ஆனால் இந்த உரிமை சீனாவுக்கு இல்லை என்று யெல்லேரி கருதுகிறார்.
“சீனாவுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் இந்தியா தனது நட்புறவை அதிகரிக்கத் தொடங்கியது. ஆப்பிரிக்காவை சர்வதேச உறவுகளின் முக்கிய நீரோட்டத்திற்குக் கொண்டு வந்த பெருமை சீனாவை சாரும் என்று சொல்வது முற்றிலும் தவறானது. ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் உறவு புவிசார் அரசியல் அல்ல. அதேசமயம் சீனாவின் உறவு புவிசார் அரசியல் சார்ந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா 1950கள், 60கள் மற்றும் 70களில் ஆப்பிரிக்காவில் தனது உறவுகளை மேம்படுத்த முதலீடு செய்யத் தொடங்கியது. ஆனால் அந்த காலகட்டத்தில் சீனாவின் அணுகுமுறை சந்தர்ப்பவாதமாகவே இருந்தது.
“ஆனால் அங்கு ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன என்று பின்னர் தெரிந்ததும் சீனா அங்கு வேகமாக முதலீடு செய்யத் தொடங்கியது,” என்கிறார் யெல்லேரி.
“இந்தியா அங்கு அடிமட்ட நிலையில் பணிபுரிந்தாலும் சர்வதேச அளவில் ஆப்பிரிக்காவை எப்போதும் தனது கூட்டாளியாகவும் நட்பு நாடாகவும் பார்க்கிறது. கானா, தான்சானியா, காங்கோ, நைஜீரியா போன்ற நாடுகளில் இந்தியர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த நாடுகளில் சீனர்கள் வாழ்ந்ததற்கான நீண்ட வரலாற்றை பார்க்க முடியாது,” என்றார் அவர்.
“ஆப்பிரிக்க நாடுகளின் கொடியை தனது தோளில் சுமந்தால், ’க்ளோபல் சவுத்தின்’ தலைவராக முடியும் என்று சீனா கருதுகிறது. ஆப்பிரிக்காவை உறுப்பினராக்கும் முயற்சியில் உரிமை கோருவதற்கு இதுவே காரணம்,” என்று யெல்லேரி குறிப்பிட்டார்.
ஜப்பானும் ஆப்பிரிக்காவில் தனது செல்வாக்கை அதிகரிக்க விரும்புகிறது.
சீனாவுடன் ஒப்பிடும்போது, க்ளோபல் சவுத்தின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கவேண்டும் என்று ஜப்பான் விரும்புகிறது என்று செயல் உத்தி விவகாரங்களின் நிபுணரும், முக்கிய ஜப்பானிய வர்ணனையாளருமான ஒருவரை மேற்கோள்காட்டி, ‘தி இந்து’, ஆங்கில நாளிதழ் எழுதியுள்ளது.
மேற்கத்திய நாடுகளை குளோபல் சவுத் நாடுகளுடன் இணைப்பதில் சீனாவை விட இந்தியா தனக்கு சாதகமாக இருக்கும் என்று ஜப்பான் கருதுகிறது. மே மாதம் நடைபெற்ற ஜி-7 மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை ஹிரோஷிமாவுக்கு வரும்படி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அழைத்ததில் இருந்து, இந்தியாவுக்கான ஜப்பானின் ஆதரவு தெரிகிறது.
“ஜப்பானும் ஆப்பிரிக்காவில் தனது செல்வாக்கை அதிகரிக்க விரும்புகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்காவிற்கு ஜப்பானின் பொருளாதார உதவி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜப்பானை விட ஆப்பிரிக்காவில் இந்தியாவுக்கு அதிக அணுகல் உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அத்தகைய நாடு மூலம் ஆப்பிரிக்காவில் தனது பிடியை விரிவுபடுத்த ஜப்பான் விரும்புகிறது ஆப்பிரிக்காவில் சீனாவின் அணுகுமுறை நிலையற்றது மற்றும் வியாபார ரீதியிலானது என்று ஜப்பான் நினைக்கிறது. வரலாற்று ரீதியாக பார்த்தாலும், ஜப்பானுக்கு சீனா மீது அதிக நம்பிக்கை இல்லை. அதனால்தான் ஆப்பிரிக்காவில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் விரும்புகிறது,” என்று யெல்லேரி கூறுகிறார்.
”ஆப்பிரிக்க நாடுகள் தற்போது இனவெறியின் நிழலில் இருந்து பெருமளவுக்கு வெளியே வந்துவிட்டன. இப்போது தங்கள் நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று அவை விரும்புகின்றன. ஆனால் சீனாவைப் பற்றி அச்சம் உள்ளது. சீனா இந்த நாடுகளுக்கு உதவி செய்ய வருகிறது. ஆனால் அது ஜனநாயக அரசுகளை ஆதரிக்கவில்லை. எனவே சீனாவின் மீது அதிக நாட்டம் கொள்வது தங்களது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை ஆப்பிரிக்க நாடுகள் படிப்படியாக உணர்ந்து வருகின்றன,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மலேஷியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசியான் நாடுகளும் ஆப்பிரிக்காவில் ஆர்வம் காட்டுகின்றன.
”ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் இன்னும் காலனித்துவத்தின் நிழல் உள்ளது. அதனால்தான் இந்த நாடுகளில் அதிக வளர்ச்சி ஏற்படவில்லை. ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் ஐரோப்பாவை மையமாகக் கொண்டவை.
எனவே அந்த நாடுகள் தங்களைச் சார்ந்து இருப்பதைப் பார்க்க ஐரோப்பாவும் அமெரிக்காவும் இப்போதும் விரும்புகின்றன,” என்று யெல்லேரி குறிப்பிட்டார்.
“ஆப்பிரிக்க நாடுகள் இப்போது இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிடமிருந்து இடைவெளியை பராமரிக்க விரும்புகின்றன. அந்த நாடுகள் இப்போது இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளை நோக்கி அதிகமாக சாய்கின்றன. மலேஷியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசியான் நாடுகளும் ஆப்பிரிக்காவில் ஆர்வம் காட்டுகின்றன,” என்றார் அவர்.
“ஆசியாவுடன் ஆப்ரிக்க நாடுகளுக்கு கலாசார ஒற்றுமை உண்டு. ஆனால் ஐரோப்பிய நாடுகள், தங்கம், வைரம், விலைமதிப்பற்ற உலோகங்கள், பெட்ரோல், மரங்கள் போன்றவற்றுக்காகவே அங்கு எப்பொழுதும் சென்றன.
வளர்ச்சியைப் பார்த்தால் இன்னும் 50 ஆண்டுகளில்கூட ஆப்பிரிக்க நாடுகள் ஐரோப்பாவை எட்டமுடியாது. 50 வருடங்களில் அவர்கள் தாய்லாந்து போல ஆகலாம். 75 வருடங்களில் மலேஷியா போல ஆகலாம். 100 வருடங்களில் இந்தியா போல ஆகலாம்.
150 வருடங்களில் சீனா போல ஆகலாம். அவர்கள் ஐரோப்பா போல ஆவதற்கு ஒருவேளை 200 வருடங்கள் ஆகலாம்,” என்று யெல்லேரி தெரிவித்தார்.