;
Athirady Tamil News

ஜி20 மாநாடு: காலநிலை நெருக்கடியின் ‘முக்கிய பிரச்னையை’ இந்தியா திசை திருப்பிவிட்டதா?!!

0

உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 உச்சி மாநாடு முடிவுக்கு வந்துவிட்டன.

ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-இன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது முதல் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொருளாதார வழித்தட ஒப்பந்தம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி எனப் பல சிறப்பம்சங்கள் இதில் உறுதி செய்யப்பட்டன.

அதேவேளையில், இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில் யுக்ரேன் போர் விவகாரம் வலிமையாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஜி20 முதல் நாளில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? அவற்றால் கிடைக்கப்போகும் பலன் என்ன? அவற்றை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் இந்தியா உட்பட உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும்?
இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடம்

இந்தியாவுக்கு இத்தகைய போக்குவரத்து ஒப்பந்தம் மிகவும் தேவையானது என்கிறார் பேராசிரியர் கிளாட்சன் சேவியர்.

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் பொருளாதார வழித்தடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜி20 மாநாட்டில் நேற்று கையெழுத்தானது.

பாரத் மண்டபத்தில் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, பிரதமர் நரேந்திர மோதி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கை குலுக்கிக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு வழித்தடங்கள் அமைக்கப்படும். அதில் கிழக்கு வழித்தடம் இந்தியாவை மேற்கு ஆசியாவுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் இணைக்கும். வடக்கு வழித்தடம், மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும்.

இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால், இதன்மூலம் இந்தியாவுக்கு நேரடியான வர்த்தகப் பயன்கள் இல்லையென்றாலும் மறைமுகமாக இந்தியாவும் இதில் பயனடைய முடியும் எனக் கூறுகிறார் கிளாட்சன்.

இந்த பொருளாதார வழித்தடத் திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சௌதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ரயில் மற்றும் கப்பல் வாயிலாக இணைக்கப்படும்.

இந்தத் திட்டம் குறித்து நேற்று(செப்டம்பர் 9) பேசிய பிரதமர் நரேந்திர மோதி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுத் திட்டத்தை இன்று உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்தார். இதன்மூலம் இந்தியா, மேற்கு ஆசியா, ஐரோப்பாவுக்கு இடையே பொருளாதார ஒருமைப்பாடு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இது சீனாவின் பிரமாண்ட பொருளாதார வழித்தடத் திட்டத்திற்கு பதிலடியாகவும் இருக்கும் என்று ஏபி செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. உலகின் பெரிய பரப்பை ஒன்றாக இணைக்கவும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தவும் ஹைட்ரஜன் எரிவாயு போன்ற ஆற்றல் உற்பத்தி உட்பட உலக நாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் உதவும்.

உலகளவில் கரிம வாயு உமிழ்வில் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதில் உயிரி எரிபொருளின் பயன்பாடும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

காலநிலை சவால்களை எதிர்கொள்ளப் போராடும் வளரும் நாடுகளுக்கு நிதி கிடைப்பதற்காக உலகளாவிய நிதி நிறுவனங்களைச் சீர்திருத்துவது, கடனை மறுகட்டமைப்பு செய்வது ஆகியவற்றில் டெல்லி ஜி20 மாநாட்டின் கூட்டுத் தீர்மானம் கவனம் செலுத்தியுள்ளது.

இதில் பேசப்பட்டுள்ள அம்சங்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 28வது காலநிலை உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.

இந்த மாநாட்டில் காலநிலை இலக்குகளைப் பொறுத்தவரை இதுவொரு முக்கியமான அம்சமும் உண்டு. முதன்முறையாக, ஜி20 நாடுகள் தூய ஆற்றலுக்கு மாறுவதற்குத் தேவையான நிதி அளவீடுகளை ஒப்புக்கொண்டுள்ளன.

கூட்டறிக்கையின்படி, வளரும் நாடுகள் தங்கள் காலநிலை இலக்குகளை அடைய 2030ஆம் ஆண்டு வரை 5.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் தேவை. வளரும் நாடுகள் 2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய வேண்டுமானால், அந்த தசாப்தத்தின் இறுதி வரை ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக 4 டிரில்லியன் டாலர் தேவைப்படும்.

இதுமட்டுமின்றி, இந்த மாநாட்டில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி. இதன் முறையான தொடக்கம், தூய ஆற்றலுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாகக் கூறுகிறார் ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதிப் பகுப்பாய்வு நிறுவனத்தின் (IEEFA) ஆற்றல் ஆய்வாளர் பூர்வா ஜெயின்.

உலகளவில் கரிம வாயு உமிழ்வில் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதில் உயிரி எரிபொருளின் பயன்பாடும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், “உலகளவில் அறிவு மற்றும் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக்கொள்ள உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஒரு தளத்தை வழங்குகிறது.

இதன்மூலம் உள்நாட்டில் உயிரி எரிபொருள் துறையில் முதலீடுகளைச் செயல்படுத்த சரியான கொள்கைரீதியிலான ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்த முடியும்,” என்கிறார் பூர்வா ஜெயின்.

இந்த ஆண்டு கடுமையான வானிலை நிகழ்வுகளால் புவிசார் அரசியலில் காலநிலை நெருக்கடி பெரும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வரலாற்றுரீதியாக கரிம உமிழ்வுகளில் பெரும் பங்கு வகித்த நாடுகளை உள்ளடக்கிய, இந்தியா, சீனா போன்ற கரிம உமிழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடுகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய காலநிலை நடவடிக்கைகளின் நிலை குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.

இந்நிலையில், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை மும்மடங்கு ஆக்குவதற்கான ஒப்பந்தம், காலநிலை நிதிக்கான தேவையில் ஒரு குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தது ஆகியவை ஜி20 மாநாட்டில் காலநிலை நெருக்கடி குறித்த விஷயத்தில் கவனிக்கத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகின்றன.

சர்வதேச ஆற்றல் நிறுவனத்திற்கான இந்திய ஆலோசகர் ஸ்வாதி டிசோசா, “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை மும்மடங்காக உயர்த்துவது குறித்த தெளிவான, சுருக்கமான அணுகுமுறை இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக உள்ளது. மேலும், காலநிலை உச்சி மாநாட்டிற்கான அடிப்படை இலக்குகளை இது வழங்குகிறது,” என்று கூறுகிறார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை மும்மடங்கு அதிகரிப்பது குறித்து ஜி20 மாநாட்டிற்குப் பிறகு பேசிய மூத்த மத்திய அரசு அதிகாரியான அமிதாப் கன்ட், “இதை காலநிலை நடவடிக்கைகளிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல்மிக்க, லட்சிய நடவடிக்கை” என்று குறிப்பிட்டதாக ஏபி செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

காலநிலை மற்றும் ஆற்றல் தொடர்பான வல்லுநர்கள் ஜி20 மாநாட்டின் தீர்மானம் குறித்து முழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்த மாநாடு காலநிலை நடவடிக்கைகளுக்கான ஒரு வலிமையான செய்தியை உலகுக்குச் சொல்லியுள்ளதாக ஒப்புக்கொள்கின்றனர்.

இதன்மூலம் இந்த ஆண்டின் இறுதியில் துபாயில் நடக்கவுள்ள 28வது காலநிலை உச்சி மாநாட்டின் காலநிலை உடன்படிக்கைக்கு ஏற்ற தொனியை வகுத்துள்ளது என்றே கூடக் கருதலாம்.

“ஜி20 உறுப்பு நாடுகள் 80 சதவீத கரிம வெளியீட்டிற்குக் காரணமாக உள்ளன. ஆகவே, இந்த மாநாட்டில் காலநிலை நெருக்கடி குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஒரு பலமான செய்தியை உலகுக்குச் சொல்வதாக” ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழில்துறை அமைச்சர் சுல்தான் அல்-ஜாபர் கூறியதாக ஏபி செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

“முதன்மையான இலக்கான புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை உடனடியாகக் குறைப்பது குறித்து தலைவர்கள் ஒப்புக்கொள்ளத் தவறுவது ஏற்படையதல்ல,” என்கிறார் கிறிஸ்டோபர் பீட்டன்.

டெல்லி கூட்டறிக்கை, 80 சதவீதம் கரிம உமிழ்வுக்குப் பொறுப்பான உலகின் முக்கிய நாடுகள் காலநிலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை அளிக்கிறது. இருப்பினும் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து எதுவும் பேசவில்லை.

காலநிலை நெருக்கடியைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் உலக நாடுகள் செய்ய வேண்டிய முதன்மையான பணி, பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் கடுமையாகக் கட்டுப்படுத்தி உடனடியாகக் குறைப்பதே என்பது சர்வதேச அளவில் வல்லுநர்களால் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.

பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குகளை அடையவும் புவி வெப்பமடைவதை 1.5 டிகிரி செல்ஷியஸாக கட்டுப்படுத்தும் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கவும் பசுமை இல்ல வாயு உமிழ்வை உடனடியாகக் குறைப்பதே முக்கியமான தேவை என்பதை காலநிலை மாதிரிகள் காட்டுவதாகக் கூறுகிறார் வளம்குன்றா வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனத்தினுடைய ஆற்றல் திட்டத்தின் தலைவரான கிறிஸ்டோபர் பீட்டன்.

ஆகவே அத்தகைய முதன்மையான இலக்கை நோக்கிய உறுதியான திட்டத்தை டெல்லி ஜி20 மாநாடு முன்மொழிந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“புதைபடிம எரிபொருட்களுக்கான பொது நிதி ஆதரவை விரைவாக நிறுத்துவது, நிலக்கரி, எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் உலகளாவிய உற்பத்தி மற்றும் நுகர்வைக் குறைப்பதற்கான முதல் படியாக அமையும். அதை அடைவதற்கு ஏற்ற உறுதியான திட்டத்தை ஜி20 மாநாடு முன்மொழிந்திருக்க வேண்டும்.

மோசமான நிதி இழப்புகளை ஏற்படுத்தும் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளபோதிலும், ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மீண்டும் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொள்ளத் தவறுகின்றனர்,” என்று கூறும் கிறிஸ்டோபர் பீட்டன் இது நிச்சயமாக ஏற்புடையது இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முக்கியமான அம்சத்தில் உலகின் 80% கரிம உமிழ்வுக்குக் காரணமாக இருக்கும் நாடுகளை ஒருமித்த கருத்துக்கு இந்த மாநாட்டில் இந்திய தலைமை வர வைத்துள்ளது.

ஆனால், புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை உடனடியாகக் குறைப்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவில்லை என்றாலும், ஜி20 உறுப்பு நாடுகளை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மும்மடங்கு அதிகரிப்பதில் உடன்பட வைத்தது மிகப்பெரிய வெற்றி என்கிறார் ஸ்வாதி டிசோசா.

“இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் இந்திய தலைமை பங்காற்றியுள்ளது. காலநிலை மற்றும் ஆற்றல் போன்ற பல்வேறு அம்சங்களில் இந்திய ஜி20 தலைமைக்கு வெற்றி கிடைத்துள்ளது,” என்று குறிப்பிடுகிறார் ஸ்வாதி டிசோசா.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா இடையிலான வழித்தடத் திட்டம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மும்மடங்கு அதிகரிப்பது போன்றவை இந்த மாநாட்டின் முக்கியமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வல்லுநர்களின் கூற்றுப்படி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பது, புதைபடிம எரிபொருட்களைக் குறைப்பது என இரண்டையுமே ஒருசேரச் செய்ய வேண்டியது காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வதில் அவசியம்.

அதில் ஒரு முக்கியமான அம்சத்தில் உலகின் 80% கரிம உமிழ்வுக்குக் காரணமாக இருக்கும் நாடுகளை ஒருமித்த கருத்துக்கு இந்த மாநாட்டில் இந்திய தலைமை வர வைத்துள்ளது.

ஆனால், இரண்டிலுமே ஒருசேர வலுவான நடவடிக்கையை உலக நாடுகளின் தலைவர்கள் எடுப்பார்களா என்பதை இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள 28வது காலநிலை உச்சி மாநாட்டில்தான் கவனிக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.