கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி: பிரதமர் மோடி 17-ந்தேதி புதிய திட்டம் தொடக்கம்!!
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிவைத்து பேசுகையில் ‘பி.எம். – விஸ்வகர்மா’ என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதி உதவி செய்யப்படும் என அறிவித்தார். இதை தொடர்ந்து இந்த திட்டத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை கிடைக்கும். மேலும், முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். பிறகு 2-ம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.
இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள். தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர், கொத்தனார், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், இரும்புக் கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் இந்த திட்டத்தில் நிதி பெற தகுதி உடையவர்கள் ஆவர். முதல் ஆண்டில் 5 லட்சம் குடும்பங்களும், 5 ஆண்டுகளில் மொத்தமாக 30 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 17-ந் தேதி ‘விஸ்வகர்மா தினத்தில்’ தொடங்கி வைக்கிறார். அதே நாளில் நாடு முழுவதும் 70 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அகமதாபாத்திலும், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் லக்னோவிலும், நாக்பூரில் மத்திய மந்திரி நிதின் கட்கரி, ஜான்சியில் ஸ்மிருதி இரானி, ஜெய்ப்பூரில் பூபேந்தர் யாதவ், திருவனந்தபுரத்தில் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்கிறார்கள். கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரம், அளவு மற்றும் சென்றடைவதை மேம்படுத்துவது மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் அவர்களை ஒருங்கிணைப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.