சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவர் கைது!!
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4.5 மில்லியன் சிகரெட்டுகளுடன் இருவரை சுங்க மத்திய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 110 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன் ஒன்றில் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் இன்று (11) பிற்பகல் கொழும்பு கிரேன்பாஸ், கிரேலைன் கொள்கலன் முற்றத்தில் இந்த சிகரெட் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கையின் சுங்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த கொள்கலன் கடந்த 7ஆம் திகதி இந்தியாவின் கட்டுப்பள்ள துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர், கொள்கலனில் 100% பருத்தி துணி மற்றும் பிளாஸ்டிக் பொத்தான்கள் இருந்ததாக சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்திருந்த போதும், ஆனால் அந்த கொள்கலனில் அப்படி எதுவும் இல்லை என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து சிகரெட் கையிருப்பு விடுவிக்கப்பட்டிருந்தால் இலங்கைக்கு 316 மில்லியன் ரூபா சுங்க வருமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டவிரோத இறக்குமதி தொடர்பில், இந்தக் கொள்கலனை விடுவிக்க வந்த இருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.