போதை கும்பல் மீது நடவடிக்கை கோரிசீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை!!
புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதி அரசு குடியிருப்பு பகுதி மற்றும் கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் ரவுடிகள் மற்றும் போதை கும்பல அட்டகாசம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டசபையிலும் தொகுதி எம்.எல்.ஏ. நேரு பேசியுள்ளார். ஆனாலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று மாலை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதி அரசு குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியை சேர்ந்த பெண் வக்கீலை தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் நிர்வாகிகள் திரண்டு முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏவிடம் இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, நாகராஜன், வெங்கடாசலபதி, ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசாரிடம் நேரு எம்.எல்.ஏ. போதை கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கஞ்சா கும்பல் பீகார் தொழிலாளர்களை தாக்கி பணத்தை பறித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திக்க வேண்டும் என கூறினார். அவரிடம் போலீசார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கூட்டம் ஒன்றில் பங்கேற்க சென்றிருப்பதால் மாலை அவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும்படி கூறி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து நேரு எம்.எல்.ஏ. தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.