செளதி அரேபிய பெண்களின் முன்னேற்றம்: ஐஎம்எஃப் அறிக்கை சொல்வது என்ன?!!
ஒரு நாட்டில் மகளிர் முன்னேற்றம் இருந்தால், அது உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கிறது.
ஆனால், பெண்கள் சுதந்திரம் என்ற கோணத்தில் செளதி அரேபியா ஒரு பழமைவாத நாடாகவே கருதப்படுகிறது.
இந்த பார்வைக்கு மாறாக, பெண்களின் உடை, பாலின பாகுபாடு மற்றும் பெண் ஓட்டுநர்கள் மீதான கட்டுப்பாடுகளை செளதி அரேபியா சமீபத்திய ஆண்டுகளில் நீக்கியது புரட்சிகர சீர்திருத்தமாக பார்க்கப்பட்டது.
ஆண் துணை இல்லாமல் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது என்ற விதியும் திருத்தப்பட்டது.
மகளிர் சுதந்திரம் அதிகமாக இருப்பதாகக் கருதப்படும் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடுகளைக் காட்டிலும்,செளதி அரேபியாவின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பு இப்போது அதிகமாகி உள்ளது.
செளதி அரேபியாவில் முன்பு கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத பல துறைகளில் தற்போது பெண்கள் பணிபுரிகின்றனர்.
எல்லை முகவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், விருந்தோம்பல் மற்றும் பிற துறைகளில் அவர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர்.
சர்வதேச செலாவணி நிதியம் (IMF) செப்டம்பர் 6 புதன்கிழமை செளதி அரேபியா குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ள விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
செளதி அரேபியாவில் பல்வேறு துறைகளில் உள்ள மொத்த பணியிடங்களில் 36 சதவீதம் இடங்களில் பெண்கள் வேலை செய்கின்றனர் என்று சர்வதேச செலாவணி நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தனது ’விஷன் 2030’ இல், பணியிடத்தில் பெண்களின் மொத்த பங்களிப்பை 30சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார்.
கடந்த 2022 இல் ஏற்கனவே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது. பல தசாப்தங்களாக தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்த உலக நாடுகளில் செளதி அரேபியாவும் இடம்பெற்றிருந்தது.
2018 ஆம் ஆண்டில் செளதி அரேபியாவின் தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்களின் பங்கு வெறும் 19.7 சதவிகிதம் மட்டுமே.
செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ’விஷன் 2030’ இன் கீழ் தனது நாட்டை ஒரு நவீன பொருளாதாரமாக மாற்ற விரும்புகிறார்.
தனது நாடு எண்ணெய் வருவாயை மட்டுமே சார்ந்திருப்பதை குறைக்க அவர் நினைத்தார்.
இதன் கீழ் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்று ஐஎம்எஃப் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
செளதி அரேபியாவைச் சேர்ந்த ஃபாத்திமா அல்மாதாமி 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
அவர் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாட்களில் தான் செளதி அரேபியாவுக்குச் செல்வதாகவும், பெண்கள் தொடர்பாக ஏற்பட்டுவரும் மாற்றங்களை உணர்வதாகவும், ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன், ஏபிசி நியூஸிடம் பேசிய ஃபாத்திமா கூறினார்.
“கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாத்திமா செளதி அரேபியாவுக்குத் திரும்பினார். தற்போது அவர் ரியாத்தில் வசித்து வருகிறார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைவதற்கு செளதி அரேபியாவின் இளம் பெண்களை பாத்திமா தயார்படுத்துகிறார்,” என்று ஏபிசியின் அறிக்கை கூறுகிறது.
செளதி அரேபிய பெண்கள் தற்போது அதிக அளவில் ஐடி படிக்கிறார்கள் என்கிறார் பாத்திமா.
“செளதி அரேபியாவில் நிலவிய பாலின பாகுபாடு காரணமாக ஆண்கள் இல்லாத இடத்தில் மட்டுமே பெண்கள் வேலை செய்ய முடியும்.
மருத்துவத் துறையில் பெண்கள் நிறைய போராட வேண்டியிருந்தது. ஏனென்றால் அந்தத் துறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பணியாற்றினர். அங்கு பெண்கள் வேலை செய்வது நெறிமுறையற்றதாகக் கருதப்பட்டது” என்று பாத்திமா ஏபிசியிடம் கூறினார்.
“இது பெண்களை சேர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் பன்முகத்தன்மையையும் ஊக்குவிக்கிறது. பெண்களின் வருகையால் நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அரசியல், சுற்றுலா, விளையாட்டு மற்றும் பிற துறைகளில் பெண்களுக்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில், அமல் அல்-மோஆலிமி நார்வேக்கான செளதி அரேபியாவின் தூதராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் செளதி அரேபியாவில், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 30.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்களுக்கான செளதி பொது ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் இது 27.6 சதவிகிதமாக இருந்தது. செளதி அரேபியாவின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு வேகமாக அதிகரித்து வருவதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஹோட்டல் மற்றும் உணவகத் துறையில் பெண்களின் பங்களிப்பு 40 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
செளதி அரேபியாவில் பெண்கள் வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்ய 2012 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு அழகுசாதனப் பொருட்களின் கடைகள் மற்றும் ஆடை விற்பனையகங்களில் பணிபுரியவும் மகளிருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2016 இல், ‘விஷன் 2030’ஐ அறிமுகப்படுத்தியபோது பெண்கள் தொடர்பான விஷயங்கள் வேகமாக மாறத் தொடங்கின.
செளதி அரேபியாவில் பெண்கள் பெரும்பாலும் தனியார் துறையில் பணிபுரிகின்றனர். இது அரசு பதவிகளை அடைவதற்கான தொடக்கமாகும்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் அரசின் உயர் பதவிகளில் இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டனர்.
இளவரசி ஹைஃபா பிந்த் முகமது அல் சவுத் சுற்றுலா துறை துணை அமைச்சராகவும், ஷிஹானா அலாஜாஜ் துணை பொதுச் செயலராகவும், நியமிக்கப்பட்டனர்.
ஷூரா கவுன்சிலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. 150 இடங்களைக்கொண்ட சபையில் 30 பெண்கள் இருப்பது அவசியம்.
”சீர்திருத்தத்தின் விளைவாக 2013 ஆம் ஆண்டில் முதல் முறையாக செளதி ஷூரா கவுன்சிலில் 30 பெண்கள் நியமிக்கப்பட்டனர்,” என்று வளைகுடா ஒத்துழைப்பு சபையின் செளதி அரேபியா இயக்குனரான இஸ்ஸாம் அபுஸ்லைமன், உலக வங்கியின் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் 17 பெண்கள் மாநகராட்சி இடங்களுக்கு நியமிக்கப்பட்டனர்.
ஆண்கள் முன்பு ஆதிக்கம் செலுத்திய துறைகளில் மேலாளர் பதவிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் இந்த ஆண்டு 11 நாடுகளுக்கு புதிய தூதர்களை நியமித்தார். அவர்களில் இருவர் பெண்கள்.
2019 ஆம் ஆண்டில் செளதி முதல்முறையாக ஒரு பெண்ணை தூதராக நியமித்தது.
அதன் பிறகு இந்த மாற்றம் தொடர்கிறது. தற்போது வரை ஐந்து பெண்களுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
செளதி அரேபியாவில் பெண்கள் இனி புல்லட் ரயில்களை ஓட்டுவார்கள் என்று 2023 ஜனவரியில் செளதி ரயில்வே ஒரு வீடியோவை வெளியிட்டது.
இதுதொடர்பாக 32 பெண்கள் பயிற்சியை தொடங்கியுள்ளதாக அதில் கூறப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய அணுசக்தி சமூகத்தில் செளதி அரேபியா பணியின் பொறுப்பு ஹைஃபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
செளதி அரேபியா, பெண்களுக்கு அளித்துள்ள பொறுப்புகள்
• 2019 ஆம் ஆண்டில் இளவரசி ரீமா பிந்த் பந்தார், செளதி அரேபியாவின் முதல் பெண் தூதரானார். அவரை அமெரிக்காவின் தூதராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமித்தார்.
• 2020 ஆம் ஆண்டில் அமல் அல்-மோஆலிமி நார்வேக்கான செளதி தூதராக நியமிக்கப்பட்டார்.
செளதி அரேபியாவின் மனித உரிமைகள் ஆணையத்துடன் தொடர்புடைய சர்வதேச நிறுவனத்தில் அவர் பொது மேலாளராகவும் இருந்துள்ளார்.
• ஸ்வீடன் மற்றும் ஐஸ்லாந்திற்கான செளதி தூதராக இனாஸ் அல் ஷாவன் 2021 ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார்.
செளதி அரேபியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்றாவது பெண் தூதராக அவர் ஆனார்.
• 2023 ஜனவரியில் நியமிக்கப்பட்ட புதிய தூதர்களில் ஹைஃபா ஜேதியாவும் ஒருவர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய அணுசக்தி சமூகத்திற்கான செளதி அரேபியாவின் பணியின் பொறுப்பு ஹைஃபாவுக்கு வழங்கப்பட்டது.
• 2023 ஜனவரியில் ஃபின்லாந்திற்கான செளதி அரேபியாவின் தூதராக நியமிக்கப்பட்ட நிஸ்ரீன் பிந்த் ஹமாத் அல்-ஷிபெல், மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.