ஆமைகள் ஏன் இறக்கின்றன?
நாட்டின் பல்வேறு கடற்கரையோரங்களில் சமீபத்தில் பெருமளவில் உயிரிழந்து கரை ஒதுங்கிய ஆமைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்னவென நிபுணர்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரியொருவரின் கூற்றுப்படி, புத்தளம் முதல் களுத்துறை வரையிலான கடற்கரையில் மூன்று வாரங்களுக்குள் சுமார் 50 ஆமைகளின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
புத்தளம், கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு நிலம், இந்துருவ மற்றும் டெல்ஃப்ட் தீவு கடற்பகுதிகளில் இருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், வனவிலங்கு திணைக்களம் பல ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியது.
இருப்பினும், நீருக்கடியில் பாரிய வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டதால் ஆமைகள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த ஆமைகளின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு விரிவான அறிக்கையை வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA), இறந்த அனைத்து ஆமைகளும் ஒரே அளவு மற்றும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று கண்டறிந்துள்ளது.