;
Athirady Tamil News

சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம்: மத்திய அமைச்சர்!!

0

சில தினங்களுக்கு முன், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விழாவில் பேசும் போது, “சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டியது” என கருத்து தெரிவித்தார். இக்கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியாவெங்கும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர். உதயநிதியின் கருத்து பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் உண்டாக்கியிருக்கிறது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத் (55). மத்திய ‘ஜல் சக்தி’ மந்திரியாக இருக்கும் இவர், கேபினெட் அமைச்சராக பதவி வகிப்பவர்.

நேற்று ஷெகாவத், பா.ஜ.க. சார்பாக ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் நடைபெற்ற பரிவர்த்தன் யாத்திரையில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அதில் அவர் கூறியதாவது:- உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம்.

எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது. இவ்வாறு கஜேந்திர சிங் தெரிவித்தார். உதயநிதியின் சனாதனம் தர்மம் குறித்த கருத்து விவகாரம் தற்போது சற்று ஓய்ந்த நிலையில், பா.ஜ.க.வின் கேபினெட் அந்தஸ்திலுள்ள அமைச்சர் இவ்வாறு கடுமையாக கருத்தை தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.