;
Athirady Tamil News

பள்ளிகள்-ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு-பப்பாளி இலை சாறு வழங்கப்படுகிறது: மாநகராட்சி ஏற்பாடு!!

0

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை மதுரவாயலில் ஒரு சிறுவன் உள்பட தமிழகம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர். 243 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து மாநிலம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். சென்னையில் டெங்குவை கட்டுப்படுத்த மாநகராட்சி எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசுபுழு வளரிடங்களான, மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் மற்று முள்ளவை கள்) ஆகியவற்றை கண்டறிந்து கொசுபுழுக்கள் இருப்பின் அதனைஅழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள் 2324 ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 3278 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட வேண்டும் எனவும், டெங்குகொசு உற்பத்தியாக கூடிய நன்னீர் தேங்கிய இடங்களிலும், டயர்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து பள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்களில் உள்ள தேவையற்ற மழைநீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டிடக் கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களிலும் கட்டிடக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்ற இடங்களிலும், காலி மனைகளிலும் தண்ணீர் தேங்கியிருந்து அதன்ம லம் டெங்கு கொசுபுழுக்கள் உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டால் தொடர்புடைய வர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதிக காய்ச்சல் கண்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை இலவசமாக அளிக்கபட வேண்டும். இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகா வண்ணம் மூடிவைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணி பிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.