;
Athirady Tamil News

அமெரிக்கா, சீனா இடையே பனிப்போர் நிலவுகிறதா? – அதிபர் ஜோ பைடன் விளக்கம்!!

0

வியட்நாமுடன் ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அமெரிக்கா சீனாவின் சர்வதேச செல்வாக்கைத் தடுக்க முயலவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்கா, வியட்நாம் இடையிலான போர் முடிவுக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. இந்நிலையில் தனது முன்னாள் எதிரியுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் வியட்நாம் சென்றிருந்தார்.

வியட்நாமுடன் விரிவான ஒரு கூட்டமைப்பு என்பது அமெரிக்காவிற்கு முக்கியமான ஓர் உறவு மேம்படுத்தல். வியட்நாமுடனான தனது உறவுகளை வலுப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா செய்த இடைவிடாத உந்துதலின் உச்சக்கட்டம் தான் இந்த ஒப்பந்தம்.

ஆசியாவில் உள்ள சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் முக்கியமாகக் கருதப்படுகிறது. அதுவும் இது சாதாரணமானதல்ல. வாஷிங்டனுடன் வியட்நாம் கூட்டு வைப்பதென்பது, வியட்நாம் நீட்டித்துள்ள தூதரக உறவுகளில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஹனோவில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், “அமெரிக்காவின் நடவடிக்கைகள் என்பது சீனாவை கட்டுப்படுத்துவதோ அல்லது தனிமைப்படுத்துவதோ அல்ல. மாறாக, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு நிலையான தன்மையை நிலைநிறுத்துவது,” என்றார்.

“பனிப்போர் என்கிற அளவுக்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளை மிகைப்படுத்தப்படுவதாக நினைக்கிறேன். இது உண்மையில் பனிப்போர் அல்ல. இது பொருளாதார வளர்ச்சியையும், நிலையான தன்மையையும் உருவாக்கும் நடவடிக்கை,” என்று பைடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிபிசியின் கேள்விக்கு பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய பைடன், “எனக்கும் சீனா பொருளாதாரரீதியாக வெற்றி பெறுவதைப் பார்க்க ஆசைதான். ஆனால், அது சர்வதேச விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்,” என்றார்.

ஆசியாவில் உள்ள சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் முக்கியமாகக் கருதப்படுகிறது.

வியட்நாம் உடனான உறவுகள் ஏற்கெனவே சீனாவை எரிச்சலடையச் செய்வதற்கான அறிகுறிகள் தெரிவதால், இது அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான பனிப்போர் மனப்பான்மைக்கு ஆதாரமாக உள்ளது.

ஆனால், இது வியட்நாமிற்கு நன்கு தெரியும் என்கிறார் பேராசிரியர் லே ஹாங் ஹிப் (Le Hong Hiep). லே ஹாங் ஹிப், சிங்கப்பூரில் உள்ள கல்லூரியில் வியட்நாமின் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார்.

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை ஒரு முக்கியமான குறியீடாகப் பார்க்கிறார் லே ஹாங் ஹிப்.

இது மேலோட்டமான குறியீடாக இருக்கலாம். ஆனால், வியட்நாமுடனான நெருக்கமான உறவும், சிறந்த வணிக ஒப்பந்தங்களும் சீனாவின் மீதான குறைந்த நம்பிக்கையைக் குறிக்கிறது.

வியட்நாம், இளைஞர்களையும், அதிகம் படித்த பணியாளர்களையும் கொண்டுள்ளது. இது அமெரிக்க முதலீட்டாளர்களை, குறிப்பாக சீனாவிற்கு வெளியே தங்கள் உற்பத்தித் தளங்களை நகர்த்த விரும்புவோரை, மிகவும் கவர்ந்திழுக்கும்.

டெல், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பெரிய பெயர்கள் அனைத்தும் சமீபத்திய ஆண்டுகளில் வியட்நாமுக்கு தங்கள் விநியோகச் சங்கிலிகளின் பகுதிகளை மாற்றியுள்ளன.

வியட்நாம் ரஷ்யாவுடனான உறவில் இருந்து வெளியேற முயல்வதால், ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களுக்கான ஒரு நம்பிக்கைக்குரிய சந்தையாகவும் அமெரிக்கா கருதுகிறது.

வியட்நாம் உலகின் செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறவும், அதன் மின்னணுத் துறையை மேம்படுத்தவும் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

இருப்பினும், வியட்நாம் அமெரிக்காவுடனான தனது புதிய உறவை இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதைப் போல பார்க்காது. சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதால், அமெரிக்காவுடன் வியட்நாம் நெருங்கிய உறவு கொண்டிருப்பதுதான் நடைமுறைக்கு சாத்தியமானது.

மின்சாரம் இல்லாத மத்திய வியட்நாமில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்தார் நுயென்.

“நான் ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தேன், அமெரிக்காவின் கனவைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு ஒரு பெரிய கனவு இருக்கிறது. அது வியட்நாமிய கனவு,” என்கிறார் செலக்ஸ் மோட்டார்ஸின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நுயென் ஹு.

நுயென் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வணிகத்தைத் தொடங்கினார். இப்போது அவர் கிராப் முதல் லாசாடா வரையிலான பெரிய டெலிவரி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அவர் மின்சாரம் இல்லாத மத்திய வியட்நாமில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்தார். அவரது வாழ்நாளில், அவர் தனது நாடு உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்து, ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்ததைக் கண்டார்.

“எங்கள் வாய்ப்புகள் மற்றும் திறன்களை முழுமையாகப் பயன்படுத்த, ஒரு வளமான மற்றும் நிலையான வியட்நாமை உருவாக்க நான் பங்களிக்க விரும்பினேன். நாங்கள் நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டோம். ஆனால் இது சரியான நேரம் என்றும் அதைச் செய்வதற்கு நாங்கள் சரியான தலைமுறை என்றும் உணர்கிறேன்,” என்றார் நுயென்.

அவர் பிபிசியுடன் பேசிக்கொண்டிருக்கையிலேயே, ஒரு சீன டெலிவரி நிறுவனத்தின் முதலாளி ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்க அவருக்காகக் காத்திருக்கிறார். வியட்நாமுக்கு பிபிசி சென்றிருந்தபோது, நம்முடன் வந்திருந்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் இதைப் பார்த்தனர்.

பைடன் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அண்டை நாடுகளின் அழுத்தத்தில் இருக்கலாம்.

வியட்நாமின் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தலையும், துன்புறுத்தலையும் சிறை தண்டனைகளையும் எதிர்கொள்கின்றனர் என்கிறது மனித உரிமைகள் காண்காணிப்பகம்.

கம்யூனிஸ்ட் கட்சி அந்நாட்டு ஊடகத்தின் மீது ஒரு பிடியைக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அச்சு மற்றும் ஒளிபரப்பு நிலையங்களையும் அரசு கட்டுப்படுத்துகிறது.

வியட்நாமுடன் ஒப்பந்தத்தை முடிக்க அமெரிக்க அரசு நிர்வாகம் கடுமையாக உழைத்தது.

அமெரிக்க வியட்நாம் உறவை சீனாவிற்கு தெரியாமல் வைத்திருப்பதே மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

வியட்நாமுடன் இந்த ஒப்பந்தத்தை முடிக்க அமெரிக்க அரசு நிர்வாகம் கடுமையாக உழைத்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரின் துணைத் தலைவர், அரசு வெளியுறவுத்துறை செயலாளர், அவரின் பாதுகாப்பு செயலாளர், மற்றும் பல அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வியட்நாமை ஈர்ப்பதற்காகப் பல முறை அந்நாட்டிற்கு பயணித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் விமானம் தாங்கிய கப்பல்களும் வியட்நாமின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.

“இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் கூட்டாண்மை வலையமைப்பில் வியட்நாம் வகிக்கும் முக்கியப் பங்கை இது பிரதிபலிக்கிறது,” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பைடனின் வருகைக்கு முன் ஒரு கருத்தரங்கில் கூறினார்.

ஆசியா முழுவதும் அமெரிக்காவின் கூட்டாளிகளின் நெட்வர்க் நிச்சயமாக கடந்த சில மாதங்களில் வளர்ந்துள்ளது. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் நாட்டின் நான்கு புதிய ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியது.

அந்தத் தலைவர்களை ஒருமித்த கருத்துக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. பாப்புவா நியூ கினியாவுடன் பசிபிக் பகுதியில் பாதுகாப்பு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது.

இராஜதந்திரத்தின் இந்த வேகம் “சீனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று பசிபிக் மன்றத்தில் இந்தோ-பசிபிக் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை திட்டத்தின் மூத்த இயக்குனர் முனைவர் ஜான் ஹெமிங்ஸ் கூறினார்.

“இந்த வெற்றிகளை வாஷிங்டன் எவ்வளவு விரைவாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை பெய்ஜிங் உணரவில்லை” என்று முனைவர் ஹெமிங்ஸ் கூறுகிறார்.

“வாஷிங்டன் ஒரு பனிப்போரில் இருப்பதாகக் கூற விரும்பவில்லை. மாறாக, தாராளவாத ஜனநாயகம் உள்ள நாடுகளுக்கு அல்லது இறையாண்மைக்கு ஆபத்துள்ள நாடுகளுக்கு அது வேண்டுகோள் விடுக்கிறது. இந்த இரட்டைக் கை அணுகுமுறை பிராந்தியத்திற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறி வருகிறது.”

வியட்நாம் பெய்ஜிங்கிற்கு ஓர் எச்சரிக்கையை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சீனா தென் சீனக்கடலை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது.

கடந்த வாரம், சீன கடலோரக் காவல்படை கப்பல் ஒன்று பாராசெல் தீவுகளுக்கு அருகே வந்த வியட்நாமிய மீனவர்களின் படகு மீது தண்ணீர் பீரங்கியை வீசியதாக அரசு ஊடகம் தெரிவித்தது.

ஆனால், வியட்நாம் அமெரிக்காவுடன் நட்பு கொள்வதற்காக சீனாவுடனான உறவை முறித்துக்கொள்ள விரும்பாது என்கிறார் லி ஹோங்.

“வியட்நாமின் கணக்குப்படி, அமெரிக்காவுடனான மேம்பட்ட உறவுகள் சீனாவுடனான அதன் உறவில் சரிவுக்கு வழிவகுக்கக் கூடாது. வியட்நாம் விரைவில் அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கக்கூடும் என்பதற்கான சில அறிகுறிகளை நாங்கள் ஏற்கெனவே காண்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

பைடன் வருகைக்கு முன், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நெயின், சீன எல்லைக்குச் சென்றார். அங்கு அவர் சீனத் தூதரை சந்தித்து நாடுகளின் நட்புறவைப் பாராட்டினார்.

“எந்தவொரு மூன்றாம் நாடும் ஒரு பெரிய அதிகாரப் போட்டியின் பக்கத்தை எடுக்க விரும்பாது. ஆனால் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு அவர்களின் செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியமான பல்வேறு துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது,” என்று ஆசிய பசிபிக் பாதுகாப்பு மையத்தின் பேராசிரியர் அலெக்சாண்டர் வூவிங் கூறினார்.

“பிராந்திய நாடுகளின் இந்தத் தேவைகளை மேம்படுத்துவது பெரும் அதிகாரப் போட்டிக்கு முக்கியமானது,” என்றும் அவர் கூறினார்.

ஆனால், அமெரிக்காவும் வியட்நாமும் சிறந்த நண்பர்களாகிவிட்டன என்பதில் சந்தேகமில்லை, ஏனெனில் வாஷிங்டன் ஆசியாவில் அதிக நட்பு நாடுகளை சேர்த்துக் கொள்கிறது.

வியட்நாமில் அமெரிக்கா பெரிதும் போற்றப்படுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 20ஆம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான போர்களில் ஒன்றின் கொடூரங்கள் மறக்கப்படவில்லை, ஆனால் 1995இல் ராஜ்ஜீய உறவுகள் இயல்பாக்கப்பட்டதில் இருந்து பரஸ்பர நம்பிக்கை வளர்ந்துள்ளது.

நடவடிக்கையில் காணாமல்போன அமெரிக்க வீரர்களின் எச்சங்களை மீட்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டன. மேலும் வாஷிங்டன் தனது சொந்த வீரர்களின் எச்சங்களை அடையாளம் காண வியட்நாமுக்கு உதவியது.

ஒவ்வோர் ஆண்டும், பல்லாயிரக்கணக்கான வியட்நாமிய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்க பயணம் செய்கிறார்கள். அது நல்லிணக்கத்திற்கான பாதையை ஆதரித்தது.

“நாங்கள் ஹஸ்ட்(HUST)-ன் மாணவர்கள். நாங்கள் இளம் வயதினர். எங்களுக்கு வலிமை உள்ளது,” என ஹனோய் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் குழு கோஷமிட்டனர்.

வேறொரு இடத்தில் ஒரு இளைஞன் தன் நண்பரிடம் இருந்த கிட்டாரை பிடுங்கி, உன்னிடம் இருப்பதைக் கொண்டாடு என்கிற வியட்நாமின் பிரபலமான பாடலை பாடினான்.

“கொரிய மற்றும் ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில்நுட்ப மையங்களை உருவாக்க வியட்நாமில் முதலீடு செய்கின்றனர். இப்போது அமெரிக்கா வந்துவிட்டது,” என்கிறார் இரண்டாம் ஆண்டு மாணவர் லுவாங் ஹாங் டுவாங்.

“எதிர்காலத்தில் வியட்நாம் அமெரிக்காவிற்கு மற்றொரு சிலிக்கான் பள்ளத்தாக்காக மாறும், எல்லோரும் இங்கு வந்து வேலை செய்வார்கள். அது நடக்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது,” என்கிறார் அந்த மாணவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.