மொராக்கோ நிலநடுக்கம்: பிறந்த 3 மணிநேரத்தில் சாலையோர கூடாரத்தில் வாழும் குழந்தை!!
கதீஜாவின் குழந்தைக்கு இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. ஆனால், அவளுடைய முதல் வீடு சாலையோரத்தில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரமாக இருக்கிறது.
வெள்ளிக்கிழமை(செப்டம்ர் 8) இரவு மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் பிறந்தார்.
தாயும் மகளும் காயமின்றி இருந்தபோதிலும், அவர்கள் இருந்த மராகேஷில் உள்ள மருத்துவமனையில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். குழந்தை பிறந்த மூன்று மணிநேரத்தில், விரைவான சோதனைக்குப் பிறகு, அவர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
“நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வு ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக எங்களை அவர்கள் வெளியேறச் சொன்னார்கள்,” எனக் கூறினார் கதீஜா.
பிறந்த குழந்தையுடன், கதீஜாவும் அவரது கணவரும் சனிக்கிழமை அதிகாலை டாக்சியில் மராகேஷில் இருந்து 65 கி.மீ (40 மைல்) தொலைவில் அட்லஸ் மலைகளில் உள்ள டாடார்ட்டில் உள்ள தங்கள் வீட்டிற்குச் செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்கள் அங்கு செல்லும் வழியில் நிலச்சரிவுகளால் சாலைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அவர்களால், அஸ்னி கிராமம் வரை மட்டுமே செல்ல முடிந்தது.
அன்றிலிருந்து அந்தக் குடும்பம் பிரதான சாலை ஒன்றின் ஓரத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகிறது. “அதிகாரிகளிடமிருந்து தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
ஒரு சிறிய துண்டில் வைத்துக்கொண்டு தனது குழந்தையை வெயிலில் இருந்து பாதுகாத்துப் பிடித்துக் கொண்டிருந்தார் கதீஜா.
“எங்களையும், குழந்தையையும் வெயிலில் இருந்து மறைக்க ஏதுவாக இந்தக் கிராமத்தில் சிலரிடம் போர்வைகள் கேட்டோம். அதனால், எங்களால் ஓர் அடிப்படைக் கூடாரத்தை உருவாக்க முடிந்தது,” என்றார் கதீஜா.
தங்களுடைய குழந்தைக்கு ஒரே ஒரு ஆடை மட்டுமே உள்ளது எனக் கூறிய கதீஜா, “எங்களுக்கு கடவுள் மட்டுமே துணையாக இருக்கிறார்,” என்று கூறினார்.
அவர்களது சொந்த ஊரைச் சேர்ந்த நண்பர்களின் வீடுகளும் மோசமாகச் சேதமடைந்துள்ளதாகவும், அவர்கள் தங்குவதற்கு ஏற்ற இடம் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை என்றும் கதீஜா குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.
உள்ளூர் செய்தியாளர் ஒருவரை சூழ்ந்து கொண்ட மக்கள், அவரிடம் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
கதீஜா இருக்கும் மராகேஷிலிருந்து அவரது சொந்த ஊரான அஸ்னி கிராமம் 50 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால், மக்கள் தங்களுக்கு அவசரமாக உதவி வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஒரு உள்ளூர் செய்தியாளரைச் சூழ்ந்துகொண்ட மக்கள், அவரிடம் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
“எங்களிடம் உணவு இல்லை, ரொட்டியும் இல்லை, காய்கறிகளும் இல்லை. எங்களிடம் எதுவும் இல்லை,” என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்.
“எங்களிடம் யாரும் வரவில்லை, எங்களுக்கு எதுவும் இல்லை, எங்களுக்கு கடவுளும் ராஜாவும் மட்டுமே உள்ளனர்,” என்றார் அவர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து அவர் தனது நான்கு குழந்தைகளுடன் கிராமத்தின் பிரதான சாலையின் ஓரத்தில் வசித்து வருகிறார். அவரது வீடு இன்னும் இருக்கிறது. ஆனால் சுவர்கள் அனைத்தும் மிகவும் மோசமாக விரிசல் அடைந்துள்ளன. அது இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள், அங்கு தங்குவதற்கு மிகவும் பயப்படுகிறார்கள்.
அவர்கள் சில போர்வைகளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள்.
ஒரு டிரக் கூட்டத்தைக் கடந்து சென்றபோது, சிலர் அதை நிறுத்த முயன்றனர். அது உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் என்று நம்பிக்கையுடன் நிறுத்த முயன்றனர். ஆனால், அது நிற்காமல் எங்களைக் கடந்து சென்றுவிட்டதாகக் கூறுகிறார் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர்.
கூட்டத்தின் மையத்தில் இருந்த நிருபர் காவல்துறையினரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். மக்கள் இன்னும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த விரும்பினர்.
சிலர் தாங்கள் அதிகாரிகளிடமிருந்து கூடாரங்களைப் பெற்றதாகக் கூறுகிறார்கள். ஆனால் தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு எங்கும் இல்லை.
அவர் இனி வாழ முடியாத தன் வீட்டிற்கு குறுக்கு வழியாக பிபிசி குழுவினரை அழைத்துச் சென்றார்.
அருகில் எம்பர்கா என்பவர் கூடாரத்தில் வசிக்கிறார். அவர் இனி வாழ முடியாத தன் வீட்டிற்கு குறுக்கு வழியாக எங்களை அழைத்துச் சென்றார்.
“வீட்டை மீண்டும் கட்ட என்னிடம் எந்த வழியும் இல்லை, என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. தற்போது, உள்ளூர் மக்கள் மட்டுமே எங்களுக்கு உதவுகிறார்கள்,” என்று எம்பர்க கூறினார்.
அவர் தனது இரண்டு மகள்கள், மருமகன் மற்றும் மூன்று பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
வீடு குலுங்கத் தொடங்கியதும், அவர்கள் வெளியே விரைந்தனர். அவர்கள் வெளிய வரும்போது தங்களின் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு மிகப்பெரிய வீட்டில் விரிசல் ஏற்பட்டு அந்த வீடு மலையிலிருந்து சரிந்து அவர்களை நாேக்கி வந்து விழுந்தது. அதில் அவர்கள் தாக்கப்பட்டு சிறு காயமடைந்தனர்.
“அரசு உதவும் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று கூறிய அவர் அவரது மருமகன், அப்தெல்ஹாடி அப்பகுதியில் மட்டும் சுமார் 120 சிறு கிராமங்கள் உள்ளதாகக் கூறினார்.