;
Athirady Tamil News

“ஒவ்வொரு இரவும் 10 முதல் 18 பேர் சீரழித்தனர்” – குஜராத்தில் வங்கதேச சிறுமிக்கு கொடுமை!!

0

“வங்கதேசத்தில் உள்ள எங்கள் வீட்டில் ஒரு சின்ன உணவகத்தை நடத்தி வந்தோம். ஒருமுறை இந்தியாவில் இருந்து என் அத்தை ஈத் பண்டிகையின்போது வங்கதேசம் வந்திருந்தார்.

அவர் இந்தியாவுக்கு திரும்பும்போது, என்னையும் அழைத்துச் சென்று வேலை வாங்கித் தருவதாகவும் அது எங்கள் குடும்ப வறுமையைப் போக்க உதவும் என்றும் அம்மாவிடம் கூறினார்.

எனது குடும்பம் சம்மதம் தெரிவித்ததன் பேரில், அத்தையுடன் நானும் இந்தியாவுக்குக் கிளம்பினேன். ஆனால், அவர் என்னை இங்கே அழைத்து வந்து பாலியல் தொழில் செய்யும் ஒரு கும்பலுக்கு விற்றுவிட்டார். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் பத்து பேர் என்னைப் பயன்படுத்தினர்.”

இவை குஜராத்தில் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்டு, பிறகு மீட்கப்பட்டு வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட ஒரு சிறுமியின் சொற்கள்.

சல்மாவுடனான (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உரையாடலில் இருந்து, அவர் வாழ்க்கையில் ஒரு மோசமான அனுபவத்தை இளம் வயதில் சந்தித்துள்ளார் என்பது தெளிவாகிறது.

குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ள ‘ஜாக்ருத் மகிளா சங்கதனில்’ சல்மா இரண்டு ஆண்டுகள் லாபாட்டா என்ற பெயரில் வாழ்ந்தார். இந்த அமைப்பு அவருக்கு சொந்த காலில் நிற்க கற்றுக் கொடுத்தது.

நல்ல வேலை பார்க்கலாம், அதனால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சல்மா, இந்த மையத்தில்தான் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றார்.

இந்த அமைப்பு அவரது தாயையும் சந்தித்தது. தற்போது சல்மா குஜராத்தை விட்டு வங்கதேசத்திற்குச் சென்றுவிட்டார். அவருக்கு இந்த இளம் வயதில் ஏற்பட்ட உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் குணமடைய அதிக காலம் ஆகலாம்.

வீட்டிற்குச் செல்வதற்கு முன் பிபிசி குஜராத்தியிடம் பேசியபோது, சல்மா கூறிய அவரது வேதனையான கதை இதயத்தில் ஒரு வலியை ஏற்படுத்தியது.

ஆனந்த் நகரில் உள்ள ஜாகுர்த் மகிளா சங்கத்தின் தலைவர் ஆஷாபென் தலால், சல்மாவை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் போலீசார் அந்த அமைப்புக்கு அழைத்து வந்ததாகக் கூறுகிறார். பஸ் ஸ்டாண்ட் அருகே தனியாக குழப்பத்துடன் அவர் இருந்ததாகவும் போலீசார் கூறியதாகவும் தெரிவித்தார்.

“அவர் இங்கே வந்ததும் எதுவும் பேசவில்லை. சில நாட்கள் வரை எப்போதும் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நாங்கள் அவருக்கு சிகிச்சை அளித்தோம். அவருக்குத் தொடர்ந்து ஆறுதல்கள் கூறினோம்.

எங்கள் மனநல ஆலோசகர்கள் அவருடன் தொடர்ந்து இணக்கமாகப் பழகி வந்தனர். இதன் காரணமாக, மெதுவாக சல்மா பேசத் தொடங்கினார். அவர் அவரைப் பற்றிய கதைகளைச் சொன்னபோது, அவரது நிலைமையைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்,” என ஆஷாபென் கூறுகிறார்.

“சல்மா, அவரது அம்மாவுக்கு உதவும் நோக்கத்தில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்தார். ஆனால், கதை தலைகீழாக மாறியது. பின்னர் இந்த மையத்துக்கு அவரது அம்மா வந்து பார்த்தபோது, சல்மா அவரைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்து இரண்டரை வருட வலியை ஒரு கணத்தில் மறந்துவிட்டார்.”

தொடர்ந்து பேசிய ஆஷபென், “அவரது தாயார் இங்கு வந்தபோது நேரடியாக எங்களுடன் பேசத் தயாராக இல்லை. ஆனால் சல்மா, நடுக்கத்துடன், அவரது வேதனையான கதையை விவரித்தார். அப்போது அவரது அப்பாவி முகத்தில் துக்கம் நிறைந்திருந்தது.”

இந்தச் சிறுமியின் கதை வங்கதேசத்தில் தொடங்குகிறது. மிகவும் வறுமையில் வாடிய குடும்பத்தைச் சேர்ந்த சல்மா, இந்தியாவில் வசிக்கும் அவரது அத்தையால் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்.

“ஈத் பண்டிகையின்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்த அத்தை, என் அம்மாவுக்கு நிறைய பரிசுகள் கொடுத்தார். நானும் என் அம்மாவும் அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அவருடன் இந்தியாவுக்குச் சென்றால் எனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று என் அம்மாவிடம் அவர் சொன்னார்.”

“இந்தியாவில் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றும் என் அத்தை காட்டிக்கொண்டார். இந்தியாவில் வீட்டு வேலை செய்து மக்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்றும் அம்மாவிடம் சொன்னார்.”

“வேலை கிடைத்தால் ஏழ்மையில் இருந்து விடுபடலாம் என்று நாங்கள் நினைத்தோம். எனவே நாங்கள் என் அத்தையின் அழைப்புக்கு ஒப்புக்கொண்டோம்.”

அப்போது சல்மாவுக்கு வெறும் 15 வயது தான் ஆகியிருந்தது. அவருடைய அத்தை அவரை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அழைத்து வந்தார். இந்தியா வந்த பிறகு அத்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாக சல்மா கூறுகிறார்.

இங்கு வந்ததும் என்னிடம் மெதுவாகப் பேசத் தொடங்கிய அத்தை, “உனக்கு பாஸ்போர்ட் இல்லை.. சட்ட விரோதமாக இங்கு வந்திருக்கிறாய். நான் உன்னை எங்கே வேலை செய்ய வைத்தாலும் நீ போக வேண்டும். அந்த இடத்தை விட்டு வெளியேறாதே. அப்படி என் அறிவுரையை மீறி நீ எங்காவது வெளியில் சுற்றிக்கொண்டிருந்தால் போலீஸ் உன்னைப் பிடித்து ஜெயிலில் அடைத்துவிடும்,” என்று பயமுறுத்தினார்.

மேலும், ” நான் சொல்வதைக் கேட்டால் நீ அம்மாவுக்கு பணம் அனுப்பலாம். இல்லை என்றால், உன் அம்மாவால் வறுமையில் இருந்து மீள முடியாது,” என மிரட்டும் தொனியில் அவர் பேசினார்.

சல்மாவின் அத்தை அவரை எங்கே கூட்டிச் சென்றார் என்று சல்மாவுக்கு தெரியவில்லை. இருப்பினும் அவர் சொல்வதை சல்மா அப்படியே பின்பற்றினார்.

“ஒரு நாள் என் அத்தை என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கே ஓர் ஆணிடம் அறிமுகப்படுத்தினார். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இந்தியாவில் தொடர்ந்து வசிப்பதற்காக, அந்த நபருக்கு பணம் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்னார். ஆனால், அதன்பின் எல்லாமே சட்ட விரோதமாகத்தான் நடந்தது. என்னிடம் ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லை,” என்று அவர் கூறினார்.

மேலும், ஒவ்வொரு மாதமும் போதிய சம்பளம் கிடைக்காவிட்டால் அம்மாவுக்கு எப்படி பணம் அனுப்புவது என்று சல்மா கவலைப்பட ஆரம்பித்தார்.

‘சில சமயங்களில் நான் 18 ஆண்களுடன் இரவைக் கழிக்க வேண்டியிருந்தது’

சல்மாவின் பிரச்சனைகள் இங்கிருந்து தான் தொடங்கின. தான் ஒரு பாலியல் குற்றக் கும்பலிடம் விற்கப்பட்டதை அவர் உணர்ந்தார். ஒவ்வொரு இரவும் அவர் ஒரு ஆணுடன் இருக்கவேண்டிய நிர்பந்திக்கப்பட்டார்.

அந்த பயங்கரமான நாட்களை நினைவு கூர்ந்த சல்மா, “அந்த மனிதர்கள் என் உடலை தினமும் பயன்படுத்தினர். சில நேரங்களில் நான் 10 ஆண்களுடனும், சில நேரங்களில் 18 ஆண்களுடன் ஒரு நாளைக் கழிக்கவேண்டியிருந்தது. இதற்கு பதிலாக எனக்கு உணவு, உடைகள் மற்றும் தூங்குவதற்கு ஒரு இடம் மட்டுமே வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் எனக்கு ஒரு சிறிய தொகையை அன்பளிப்பாக அளித்தனர். அதில் எனக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும்.

அவர் மேலும் பேசுகையில், “ஒரு மாதத்திற்குப் பிறகு நான் நவ்சாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன், பின்னர் வதோதராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பணம் என் அம்மாவுக்கு அனுப்பப்பட்டதாக என் முதலாளி என்னிடம் கூறுவார்,” என்றார்.

ஆனால், சல்மாவின் அம்மாவுக்குப் பணம் செல்லவில்லை என்பது மிகவும் தாமதமாகத்தான் அவருக்குத் தெரிந்தது. இதையடுத்து, போலீசாரிடம் சிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக சல்மா தலைமறைவானார்.

விபச்சார தொழிலில் சிக்கி சல்மாவின் வாழ்க்கை சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. அவர் தப்பிக்க விரும்பினார். ஆனால் அவரால் தப்பிக்க முடியாத ஒரு வலையில் அவர் ஏற்கெனவே சிக்கியிருந்தார்.

தப்பிச் செல்வதற்கான வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு ஒரு நாள் அந்த வாய்ப்பு கிடைத்தது.

அவர் சொல்கிறார், “ஒரு நாள் எந்த வாடிக்கையாளர்களும் அந்த விடுதிக்கு வரவில்லை. எனக்குக் கிடைத்த சரியான வாய்ப்பு அதுதான். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஹோட்டலை விட்டுத் தப்பி ஓடிவிட்டேன். நான் ரகசியமாக ஆனந்த் நகர பேருந்து நிலையத்தை அடைந்தேன். போலீஸ் கண்ணில் படாமல் இருப்பதற்காக மறைந்து மறைந்து நின்றேன். ஆனால் அது என்னை ஒரு திருடி என்று மக்களை நினைக்க வைத்தது. அதையடுத்து, அவர்கள் என்னை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் சல்மாவை பிடித்தனர். ஆனால் அவர் தனது பெயரை அவர்களிடம் கூறவில்லை. அவரது நிலையைப் பார்த்த போலீஸார், அங்குள்ள ஜாகுர்த் மகிளா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிறுவனத்தில் பல துன்பகரமான பெண்கள் வாழ்கிறார்கள் மற்றும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடரவும் உதவுகிறார்கள்.

இங்கு சேர்க்கப்பட்ட பின் என்ன நடந்தது என்பது குறித்து தனது அனுபவத்தை விவரிக்கும் சல்மா, “இங்கே வந்த பிறகு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று உணர்ந்தேன். ஆனால் நான் தொடர்ந்து போலீஸைக் கண்டு பயந்ததால் அவ்வாறு என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. இருப்பினும், இங்குள்ள நிர்வாகிகளின் அன்பான குணத்தைப் புரிந்துகொண்ட பின்னர் மெதுவாக என்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவர்களிடம் சொன்னேன். என்னுடைய வேதனையான அனுபவங்களையும் சொன்னேன். நான் ஊமை இல்லை என்றும், காவல்துறைக்கு பயந்து எதுவும் பேச முடியாத நிலையில் சிக்கிவிட்டதாகவும் அவர்களிடம் கூறினேன்,” என்றார்.

இந்த ஜாகுர்த் மகிளா சங்கதனில் பணியாற்றிய நிர்வாகிகள் சல்மாவின் இருண்ட வாழ்க்கையில் நம்பிக்கையின் ஒளிக் கதிர் தோன்றும் நிலையை உருவாக்க முயன்றனர். இதன் ஒரு பகுதியாக அவருக்கு மனநல மருத்துவரால் ஆலோசனை வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜாகுர்த் மகிளா சங்கதன் அமைப்பைச் சேர்ந்த ஆஷாபென் தலால் கூறும்போது, “சல்மாவின் உண்மை நிலையை அறிந்ததும், காவல்துறை, அரசு மற்றும் வங்கதேச தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தோம். அவரை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பும் முயற்சி அப்போதே தொடங்கியது. அரசு எந்திரத்தின் உதவியால் சல்மாவின் அம்மாவைத் தொடர்பு கொள்ள முடிந்தது. மகளின் பரிதாப நிலை அந்தத் தாய்க்கு தெரியவந்த போது, அவர் கடுமையான வேதனை மற்றும் ஆற்றாமையில் தவித்தார். பின்னர், அவர் தனது மகளை சந்திப்பதற்காகவே, தனது வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, அதைப்பெற்றார்.

இதற்கிடையே, இங்கே சல்மா இருந்த இரண்டு ஆண்டுகளில் எம்பிராய்டரி, தையல், இமிட்டேஷன் நகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை நன்கு கற்று ஜாகுர்த் மகிளா சங்கதனுடன் இணைந்து ஏராளமான பொருட்களைத் தயாரித்துள்ளார்.

ஜாகுர்த் மகிளா சங்கதனில் சல்மா தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததன் இந்த அமைப்புக்கு இரண்டு லட்சம் ரூபாய் கிடைத்தது. சல்மா தனது தாயுடன் வங்கதேசம் சென்றபோது, அவர் சம்பாதித்த இரண்டு லட்ச ரூபாயை அந்த அமைப்பும் சல்மாவுக்கு வழங்கியது.

இதற்கிடையில், சல்மாவின் அத்தை கைது செய்யப்பட்டு வங்கதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று சல்மா தன் துயரங்களை எல்லாம் கடந்து, தாயுடன் சொந்த கிராமத்தை அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அவருடைய மனதுக்குள் குவிந்த கசப்பான நினைவுகள் அனைத்தும், அவருடைய குடும்பத்தினரின் பாசம், பரிவு, ஆறுதல் மற்றும் ஆதரவில் கலைந்து காணாமல் போயுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.