வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்!!
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 3 மாநிலங்களையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்பதால் இந்த மாநிலங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 18-ந் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.