காசா முனையில் குண்டு வெடிப்பு: ஐந்து பாலஸ்தீனர்கள் பலி!!
பாலஸ்தீனம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். அதேபோன்று, காசா முனையை பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துவார்கள். இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராட்டக்காரர்களும் காசா முனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த இடம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளிக்கும். கடந்த 2005-ம் ஆண்டு காசா முனையில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது.
அந்த பகுதியில் வேலியிடப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2007-ல் அந்த பகுதியை ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய நாளை நினைவு கூறும் வகையில் போராட்டக்காரர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டனர். அவர்கள் நாட்டின் கொடியை அசைத்து, டயர்களை எரித்து போராட்டடத்தில் ஈடுபட்டனர். வேலியை தகர்க்கும் வகையில் குண்டுகளை வீச முயன்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக குண்டுகள் வீசப்படுவதற்கு முன்னதாகவே வெடித்துள்ளது. இதனால் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு முன், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கையெறிகுண்டுகள், மற்ற வெடிபொருட்களை எல்லையை நோக்கி வீசினார்கள். ராணுவம் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர். இதில் 25 பேர் காயம் அடைந்தனர் என ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.