சில தொகுப்பாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க இந்தியா கூட்டணி முடிவு!!
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த சுமார் 26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து INDIA கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டப்பின் இந்த குழு கூடியது. அடுத்தபடியாக தொகுதி பங்கீடுதான் முக்கிய இலக்கு எனத் தெரிவித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாகவும், எந்தெந்த தொலைக்காட்சிகள் என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்தின் ஒரு பிரிவினர் தொடர்ந்து விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின்போது, அவரின் நடைபயணம் மிகக்குறைந்த அளவிலேயே காட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தன. மக்கள் ராகுல் காந்தி யாத்திரைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால், முக்கியமான மீடியா எங்களை தொடர்ந்து புறக்கணித்தது என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருநதார். மேலும், ”செய்தி ஆசிரியர் யாத்திரையை புறக்கணிக்கிறார் என்பது எனது குற்றச்சாட்டு, லட்சக்கணக்கானோர் பிரசாத்தில் ஈடுபடுகின்றனர்.
நீங்கள் இதுபோன்ற மிகப்பெரிய பிரசாரத்தை காட்ட மாட்டீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். கடந்த 2019-ம் ஆண்டு இதுபோன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சுமார் ஒரு மாதகாலம் காங்கிரஸ் புறக்கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ”காங்கிரஸ் தங்களது செய்தி தொடர்பாளர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மீடியா சேனல்கள் மற்றும் எடிட்டர்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக யாரையும் அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது” என காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.