கூடங்குளம் அருகே தரைதட்டி நிற்கும் மிதவை படகால் ஆபத்தா? அணுமின் நிலையம் கூறும் விளக்கம்!!
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் தத்தளித்து வரும் மிதவை படகை மீட்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவடையும் என கூடங்குளம் அனுமின் நிலைய வளாக இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2வது அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 3, 4, 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய அணு உலைகள் கட்டுமானத்துக்குத் தேவையான சில தளவாட பொருட்கள் ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கிருந்து பார்ஜ் (Barge) எனப்படும் மிதவை படகுகளில் ஏற்றப்பட்டு சிறிய இழுவைப் படகுகள் (Tug Boat) மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள படகு இறங்கு தளத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன. சில தளவாட பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலமாகவும் கூடங்குளம் கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானத்துக்கான தளவாட பொருட்கள் மிதவை படகில் அணுமின் நிலைய வளாக படகு இறங்கு தளத்துக்குக் கொண்டு வரப்பட்டன.
படகு இறங்குதளத்தின் அருகே மிதவை படகு வந்தபோது, இழுவை படகுக்கும் மிதவை படகுக்கும் இடையிலான கயிறு அறுந்து விட்டது. இதனால் மிதவை படகு கடல் அலைகளின் திசையில் இழுத்துச் செல்லப்பட்டு பாறைகள் நிறைந்த கடற்கரை பகுதியில் தரைதட்டி நின்றது. இதை மீட்கும் முயற்சி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதோடு கடல் நீர்மட்டமும் தாழ்வாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் தரப்பில் திங்கள் கிழமை (ஆக.12) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் பாறைகளில் சிக்கியுள்ள நீராவி ஜெனரேட்டர்கள் ஸ்திரத்தன்மையோடு, பாதுகாப்பாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மிதவை படகு மீட்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 3 முதல் 6 வரையிலான அணு உலைகளுக்குத் தேவையான தளவாட பொருட்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு பெரிய கப்பல்கள் (bulk ship) மூலம் கொண்டு வரப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கப்படுகின்றன. பெரிய தளவாட பொருட்கள் அங்கிருந்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்துக்கு பார்ஜ் (Barge) எனப்படும் மிதவை படகுகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன,” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “அணு உலைகள் 5 மற்றும் 6 ஆகியவற்றின் கட்டுமானத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 4 நீராவி ஜெனரேட்டர்கள் (Steam Generator) ஆகஸ்ட் 12 அன்று தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்தன. இவை ஒவ்வொன்றும் தலா 310 டன் எடை உள்ளவை.
இவற்றில் இரண்டு நீராவி ஜெனரேட்டர்கள் மிதவை படகுகள் மூலம் ஏற்கெனவே ஆகஸ்ட் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள படகு இறங்குதளம் வழியாக பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டன,” என்று கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, “தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி மீதமுள்ள இரண்டு நீராவி ஜெனரேட்டர்களும் மிதவை படகுகள் மூலம் அனுமின் நிலைய படகு இறங்குதளத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அந்த மிதவை படகு அணுமின் நிலைய படகு இறங்கு தளத்தின் முகத்துவாரம் அருகே வந்தபோது இழுவை படகிற்கும் மிதவை படகிற்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
கடல் அலைகள் காரணமாக மிதவை படகு கடற்கரைக்கு அருகே இழுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் தரைதட்டி நிற்கிறது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்திக் குறிப்பில், “இரண்டு நீராவி ஜெனரேட்டர்கள் ஏற்றப்பட்ட இந்த மிதவை படகு தற்போது அணுமின் நிலைய வளாகத்துக்கு மிக அருகில் (உத்தேசமாக 300 மீட்டர் தொலைவில்) தரை தட்டி நிற்கிறது. மேலும் இது ஸ்திரத்தன்மையோடும் பாதுகாப்பாகவும் உள்ளது.
இந்த நீராவி ஜெனரேட்டர்கள் அது தயாரிக்கப்பட்ட நாட்டிலிருந்து புதிதாக உற்பத்தி செய்யப்பட்டு கொண்டு வரப்படுவதால் இவற்றால் எந்த சுற்றுச்சூழல் ஆபத்தும் இல்லை.
இழுவைக் கயிறு அறுபட்ட சம்பவத்தின்போது எவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
தரை தட்டியுள்ள மிதவை படகை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வானிலை மாற்றங்களைப் பொறுத்து மீட்புப் பணிகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நிறைவடையும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அணுசக்திக்கு எதிரான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தனது சமூக ஊடக பக்கத்தில், “தரை தட்டி நிற்கும் இந்த மிதவை படகில் இருப்பது என்ன? இது சுற்றுச்சூழலுக்கும், கடலுக்கும், மக்களுக்கும் ஆபத்தானதா? கூடங்குளம் அணுக்கழிவுகளும் இப்படித்தான் கையாளப்படுமா? இதுகுறித்து யார் தெளிவு படுத்துவார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுப. உதயகுமார், “கூடங்குளம் அணுமின் நிலைய படகு இறங்குதளம் அருகே மிதவை படகு தரை தட்டி நிற்கிறது. இதன்மூலம் அந்தப் படகு இறங்குதளம் பாதுகாப்பற்றதாக உள்ளது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
தரைதட்டி நிற்கும் மிதவையில் உள்ள நீராவி ஜெனரேட்டரின் மதிப்பு ரூபாய் 670 கோடி எனக் கூறப்படுகிறது. இத்தனை விலை உயர்ந்த ஒரு பொருளை அவர்களால் பாதுகாப்பாக இறக்க முடியவில்லை. வரும் காலங்களில் இந்த வழியாகத்தான் அணுக்கழிவுகளை கையாளப் போகிறார்கள். அப்போது எப்படி இது பாதுகாப்பாக இருக்கப் போகிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “நடந்த சம்பவங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. எந்தத் தகவலையும் யாரும் கூறுவதில்லை. சம்பவம் நடந்த பின்னர் மக்கள் கண்டுபிடித்துக் கூறிய பின்னர்தான் இது வெளி வந்துள்ளது. இல்லையென்றால் இதை முழுவதுமாக மூடி மறைத்திருப்பார்கள்.
நடந்த உடனேயே சம்பவம் குறித்து மக்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது வரை தரைதட்டிய மிதவை படகை மீட்கவில்லை,” என ஆதங்கப்பட்டார்.
இந்தத் திட்டம் குறித்த விவரங்களையும் இப்படியொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதையும் மக்களிடம் கூறினால் நம்பகத்தன்மை ஏற்பட்டிருக்கும் எனக் கூறுகிறார் சுப.உதயகுமார். ஆனால், “அதிகாரிகள் தரப்பில் எதுவும் உடனடியாகத் தெரிவிக்கபடவில்லை,” என்கிறார்.
கூடங்குளத்தில் முதல் இரு அணு உலைகள் கட்டுமானத்துக்கு செலவிடப்பட்ட தொகையைவிட இருமடங்கு தொகை 3 மற்றும் 4ஆம் அணு உலைகள் கட்டுமானத்துக்கு செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார் சுப.உதயகுமார்.
இந்நிலையில், “தற்போது அதைவிட கூடுதல் தொகை 5 மற்றும் 6வது அணு உலைகள் கட்டுமானத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்பது குறித்து மக்களுக்கு அரசும் அணுசக்தித் துறையும் தெளிவுப்படுத்த வேண்டும். ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுவதில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.