செளதி இளவரசர் முகமது பின் சல்மான் காந்தி சமாதிக்கு செல்லாததற்கு இஸ்லாமிய நம்பிக்கை காரணமா?!!
ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்த பல தலைவர்கள் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை ராஜ்காட் சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தது. இருந்தபோதிலும்கூட ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் அன்டோனியோ குட்ரேஸ், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பல தலைவர்கள் ராஜ்காட் சென்றனர்.
ராஜ்காட் சென்ற தலைவர்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவானும்ஆகியோரும் அடங்குவர்.
ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்தசெளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோதியுடன் ராஜ்காட் செல்லவில்லை.
இருப்பினும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ராஜ்காட் செல்லவில்லை. உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் சனிக்கிழமையே டெல்லி வந்துவிட்டார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
செளதி இளவரசர் ராஜ்காட் செல்லாததற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா என்பதை பலரும் அறிய விரும்புகிறார்கள்.
மகாத்மா காந்தியை அவமதிப்பது அவரது நோக்கமாக இருந்திருக்காது என்றும் மாறாக அவரது ‘சலஃபி’ சித்தாந்தமே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
“அஹ்ல்-இ-ஹதீஸ் என்று அழைக்கப்படும் சலஃபிகள், எந்த விதமான சமாதிகள் அல்லது கல்லறைகளுக்கும் செல்ல மாட்டார்கள்,” என்று ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் ஜாகிர் ஹுசைன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் அக்த்ருல் வாஸே கூறுகிறார்.
”கல்லறைகளை, உறுதியாகக் கட்டுவது கூட அவர்களைப் பொருத்தவரை (சலஃபி சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்) தவறு,” என்று இஸ்லாமிய அறிஞர் ஜஃபருல் இஸ்லாம் கான் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய நீதி சாஸ்திரத்தில் ஐந்து முக்கிய சித்தாந்தங்கள் உள்ளன. அவை ஹன்ஃபி, ஷஃபி, மாலிகி, ஹம்ப்லி மற்றும் ஜாஃபரி.
ஜாஃபரி அல்லது ஃபிக் ஜாஃபிரி, ஷியா சமூகத்தைச் சேர்ந்தது. மீதமுள்ள நான்கும் சன்னி சமூகத்தைச் சேர்ந்தவை.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ஹன்ஃபி சித்தாந்தத்தை பின்பற்றுகிறார்கள்.
மகாத்மா காந்தியை அவமதிக்க வேண்டும் என்பது அவரது நோக்கமல்ல என்று இஸ்லாமிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இவை அனைத்திலிருந்தும் தாங்கள் வேறுபட்டவர்கள் என்று சலஃபி அல்லது அஹ்ல்-இ-ஹதீஸ் கருதுகின்றனர்.
இந்த சித்தாந்தங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் கடைசி தீர்க்கதரிசியான முகமது நபியின் மரணத்திற்குப்பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து தோன்றியதாகவும், இவை அனைத்தும் வெவ்வேறு இமாம்களால் சொல்லப்பட்ட இஸ்லாத்தின் விளக்கங்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே முகமது நபியின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் பல விஷயங்கள் அவற்றில் இடம் பெற்றிருக்கக்கூடும்.
அஹ்ல்-இ-ஹதீஸ், இஸ்லாமின் புனித நூலான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் படி மட்டுமே இஸ்லாத்தை நம்புகிறது.
ஹதீஸ் என்பது நபிகள் நாயகத்தின் வாசகங்கள் மற்றும் நபிகள் நாயகம் வெவ்வேறு காலங்களில் செய்த செயல்களை அடிப்படையாகக் கொண்ட தொகுப்புகள் ஆகும்.
மகாத்மா காந்தி கல்லறைக்கு செல்லாததற்கு முகமது பின் சல்மான் பின்பற்றும் ‘சலஃபி’ சித்தாந்தமே காரணமாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
”பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியாவில் வஹாபியத் (அஹ்ல்-இ-ஹதீஸ் அல்லது சலஃபி சித்தாந்தம்) பரவத் தொடங்கியபோது, ஆங்கிலேயர்கள் அவர்களை ’கைர்-முகல்லித்’, அதாவது யாரையும் பின்பற்றாதவர்கள் என்று அழைத்தனர்,” என்று ஜஃபருல் இஸ்லாம் கூறுகிறார்.
” மஸ்ஜிதுல் ஹராம் அதாவது காபா, மஸ்ஜிதுல் நபவி மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று இடங்களுக்குச்செல்வது மட்டுமே சரி என்று அவர்கள் கருதுகின்றனர்,” என்று பேராசிரியர் அக்த்ருல் வாஸே கூறுகிறார்.
செளதி அரேபியாவின் மெக்காவில் அமைந்துள்ள காபாவின் கட்டுமானம் இப்ராஹிம் நபியுடன் இணைத்து பார்க்கப்படுகிறது. முகமது நபியின் சமாதி மதீனாவில் உள்ள மஸ்ஜிதுல் நபவியில் உள்ளது.
அக்ஸா மசூதி ஜெருசலேமில் உள்ளது. நபிகள் நாயகம் தனது வாழ்நாளில் இங்கிருந்து சொர்க்கத்திற்குச் சென்றதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
அஹ்ல்-இ-ஹதீஸ் என்று அழைக்கப்படும் சலஃபிகள், எந்த விதமான சமாதிகள் அல்லது கல்லறைகளுக்கும் செல்ல மாட்டார்கள்.
மதீனாவிலுள்ள முகமது நபியின் சமாதியும் உறுதியாக கட்டப்படவில்லை. அதன் நாலாபுறமும் அலங்கார தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மக்காவிலும் மதீனாவிலும் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் மற்றும் தோழர்களின் கல்லறைகளும் அமைக்கப்படவில்லை. ஏனெனில் சலஃபி சித்தாந்தத்தில் இது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
”துருக்கி அதிபர் தயீப் எர்துவான் ராஜ்காட் சென்றதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அவர் ஹன்ஃபி சித்தாந்தத்தை பின்பற்றுபவர்,” என்று பேராசிரியர் வாஸே குறிப்பிட்டார்.
அரபு நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மற்றும் போட்டிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, வெவ்வேறு நாடுகள் இஸ்லாத்தின் வெவ்வேறு சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டதும் ஆகும்.
செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்த பதற்றம் இப்போதுதான் சிறிதே தணிந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன.
ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு, ஒரே கடவுள் என்ற நம்பிக்கை, நபிகள் நாயகம் இஸ்லாத்தின் கடைசி தீர்க்கதரிசி என்ற உறுதி, மரணத்திற்குப் பின் வாழ்வு ஆகிய மூன்றும் தேவை என்று இஸ்லாமிய நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மூன்றிலும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. நபிகள் நாயகம் மற்றும் அவரது தோழர்களின் மரணத்திற்குப் பிறகு, வெவ்வேறு இமாம்கள் தங்கள் சொந்த வழிகளில் மத புத்தகங்களையும் நிகழ்வுகளையும் விளக்கிய காலம் வந்தது.
இந்த விளக்கங்கள் புவியியல் நிலைமைகள் மற்றும் பிற காரணங்களை உள்ளடக்கியது. இதிலிருந்து வேறுபாடுகள் தொடங்கின.
இருப்பினும், இந்த விவகாரத்திலும் ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் ஒரு நீண்ட கதை உள்ளது.