;
Athirady Tamil News

கென்னடி படுகொலை: 60 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் அதிகாரி கூறும் அதிர்ச்சித் தகவல்!!

0

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய நிகழ்வுளில் ஒன்று. அதேபோல் மிகவும் ஆய்வுக்கு உள்ளான நிகழ்வுகளில் முக்கியமானதாக இந்தப் படுகொலை கருதப்படுகிறது.

இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னமும் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை குறித்த புதிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.

பால் லாண்டிஸ், 88 வயதான இவர் ரகசிய புலனாய்வு முகமையின் முன்னாள் அதிகாரி. அதிபரின் மரணத்தை நெருக்கமாக அருகில் இருந்து கண்டவர் என்ற முறையில் அவர் வெளியிடவுள்ள ஒரு நினைவுக் குறிப்பேட்டுக்காக சில புதிய தகவல்களை அளித்துள்ளார்.

அதில் முன்னாள் அதிபர் கென்னடி சுடப்பட்ட பிறகு காரில் இருந்து ஒரு தோட்டாவை எடுத்து, அதை மருத்துவமனையில் கென்னடியின் ஸ்ட்ரெச்சரில் தான் விட்டுச் சென்றதாக அவர் கூறுகிறார்.

இந்த விஷயம், 1960களில் நடந்த ஒரு வழக்கில் வரும் மிகச் சாதாரணமான விவரமாகத் தோன்றலாம். ஆனால், ஒவ்வொரு சாட்சியத்தையும் பல ஆண்டுகளாகத் தீவிரமாகக் கவனித்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு, லாண்டிஸ் கூறிய இந்தத் தகவல் ஒரு பெரிய, எதிர்பாராத ஆச்சர்யத்தை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

இந்தப் படுகொலையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் எத்தனை பேர் ஈடுபட்டனர், இறுதியில் இந்த கொலைக்கு யார் பொறுப்பாளிகள், உண்மையில் எத்தனை தோட்டாக்கள் கென்னடியைத் தாக்கின, இந்தப் படுகொலையின் பின்னால் இருந்த சதித்திட்டம் என்ன என்பது குறித்து இதுவரை ஏராளமான சதிக்கோட்பாடுகள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கின் உண்மையான விவரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களில் இருந்து பல விதங்களில் வேறுபடுகின்றன என்ற கருத்து, என்ற கருத்துதான் அண்மைக்காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ‘அசல் சதிக்கோட்பாடாக’ உள்ளது.

ஜான் எஃப் கென்னடி, பின் இருக்கையில் அமர்ந்திருக்க, டெக்சாஸ் ஆளுனர் ஜான் கானலி முன்புற இருக்கையில் அமர்ந்திருந்தார்.

மேலும் சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த கொலை அமெரிக்க அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் உள்ளது.

ஒருவரது பார்வையைப் பொறுத்து, லாண்டிஸ் கூறும் தகவல் இந்தப் படுகொலை சம்பவம் குறித்த அவர்களது புரிதலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாலும்கூட போகலாம்.

ஆனால், அவரது புத்தகமான ‘தி ஃபைனல் விட்னஸ்’, கென்னடி படுகொலையின் மீதான தீராத தேசிய ஆவேசத்திற்கு மேலும் தூண்டுதலைச் சேர்க்கும் என்பது மட்டும் உறுதி.

“இது உண்மையில் 1963ஆம் ஆண்டில் படுகொலை நடந்த பிறகு வெளியாகும் மிகவும் குறிப்பிடத்தக்க செய்தி,” என்று ஒரு வரலாற்றாசிரியரும் கென்னடி கொலை குறித்து நிறைய தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பவருமான ஜேம்ஸ் ரொபெனால்ட் கூறினார்.

அவர் லாண்டிஸுடன் இணைந்து செயல்பட்டு, அவர் பொதுவெளியில் புதிய தகவல்களை வெளியிடும் அளவுக்குத் தயாராவதில் அவருக்கு உதவியிருக்கிறார்.

கென்னடி படுகொலையின் முக்கிய உண்மைகள் இந்தக் கட்டத்தில் நன்கு அறியப்பட்டவை என்பது மட்டுமின்றி அவை சட்டத்தின் முன் முறைப்படி நிறுவப்பட்டுள்ளன.

அதிபர் கென்னடி 22 நவம்பர் 1963 அன்று, அவரது மனைவி ஜாக்குலின் கென்னடி, டெக்சாஸ் ஆளுனர் ஜான் கானலி ஜூனியர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரு வாகனம் டல்லாஸில் உள்ள டீலி பிளாசா வழியாக சென்றுகொண்டிருந்தபோது கென்னடியை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில், கென்னடியின் தலை மற்றும் கழுத்தில் தோட்டா துளைத்தது. இதேபோல் டெக்சாஸ் ஆளுனர் கானலி ஜூனியரின் முதுகை துப்பாக்கிக் குண்டு துளைத்தது.

இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் அருகிலுள்ள பார்க்லேண்ட் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், கென்னடி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இருப்பினும் ஆளுனர் கானலி உயிர் பிழைத்தார்.

அதிபர் ஜான் எஃப் கென்னடியை கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கியை டல்லாஸ் போலீஸ்காரர் ஒருவர் பிடித்துள்ளார்.

வாரன் விசாரணை ஆணைய அறிக்கை, கென்னடி கொலை பற்றிய அரசுடைய விசாரணையின் விளைவாக, துப்பாக்கி ஏந்திய ஒரே நபரை லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்று அடையாளம் கண்டது. பாலிஸ்டிக்ஸ் சான்றுகள் இந்த முடிவை உறுதிப்படுத்த உதவின. கென்னடி படுகொலை செய்யப்பட்ட பிறகு போலீஸ் காவலில் இருந்தபோது சிறிது நேரத்திலேயே அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசின் விசாரணை அறிக்கைப்படி, கென்னடியின் உடல் வழியாக ஒரு தோட்டா பாய்ந்து, கானலியை தாக்கியது என்பதுடன், இந்த தோட்டா அவர்கள் இருவருக்கும் பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியது.

துப்பாக்கி ஏந்திய ஒரு தனிநபர் எவ்வாறு தாக்குதலை நடத்தினார் என்பதை விளக்க இந்த அறிக்கை உதவுகிறது. இந்த அறிக்கை “ஒற்றைத் தோட்டா கோட்பாடு” அல்லது “மேஜிக் தோட்டா கோட்பாடு” என்று அறியப்பட்டது.

மருத்துவமனையில் கானலி படுக்க வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரெட்சரில் ஒரு தோட்டா பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது என்ற உண்மையை விசாரணை ஆணையம் ஓரளவு நம்பியுள்ளது.

அந்த நேரத்தில், அந்த தோட்டா எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் விசாரணை ஆணையம், கானலிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அவரை வேகமாகக் கொண்டு சென்றதால் அந்த தோட்டா இடம் மாறியது என்று இறுதியில் முடிவு செய்தனர்.

அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கையின் மீது சில சந்தேகங்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. அதுவும் ‘ஒற்றைத் தோட்டா’ குறித்து வலுவான சந்தேகங்களும் நீடித்து வருகின்றன. இரண்டு தனித்தனி மனிதர்களின் உடல்களில் ஒற்றைத் தோட்டா பல காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நம்புவது கடினம்.

லாண்டிஸ் அளிக்கும் புதிய தகவல்கள் ஒற்றைத் தோட்டா குறித்த விசாரணை அறிக்கையின் மீது பல சந்தேகங்களை எழுப்பும் ஒரு வெடிகுண்டைப் போன்ற முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

கென்னடி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைச் சுட்டுக்கொல்ல போலீசார் இந்தத் துப்பாக்கியைத் தான் பயன்படுத்தினர்.

கென்னடி படுகொலை செய்யப்பட்ட நாளில், அப்போது 28 வயதான லாண்டிஸ், ஜாக்குலின் கென்னடியிடம் அந்தச் சம்பவம் பற்றி விவரித்தார்.

அந்த வன்முறைச் சம்பவம் தொடங்கியபோது, ​​அவர் அதிபர் கென்னடியிடமிருந்து சில அடி தொலைவில்தான் இருந்தார் என்பதுடன், அவரது தலையில் பயங்கரமான காயத்தைக் கண்டார்.

அதன் பின்னர்தான் அந்த முழுமையான – குழப்பமான சம்பவம் நிகழ்ந்தது. அதற்கடுத்து, லாண்டிஸ் என்ன செய்தார் என்பதை இத்தனை ஆண்டுகளில் ஒரு சில நம்பிக்கையானவர்களைத் தவிர வேறு யாரிடமும் அவர் சொல்லவில்லை.

நியூயார்க் டைம்ஸுக்கு லாண்டிஸ் அளித்த பேட்டியில், சம்பவம் நடந்த அன்று கென்னடியை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர், அவர் அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்னால் அவரது காரில் ஒரு தோட்டாவை கண்டதாக லாண்டிஸ் தெரிவித்தார்.

கென்னடியை சுட்டுக்கொன்ற நபரின் கைவிரல் ரேகைகளை முழுமையாக போலீசார் பதிவு செய்து வைத்துள்ளனர்.

அதை எடுத்து அவரது பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது நினைவில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில், அவர் கென்னடியுடன் அவசர மருத்துவ சிகிச்சை அறையில் இருந்தார். அங்கு அவர் அதை கென்னடியின் ஸ்ட்ரெட்சரில் வைத்ததாகவும், அது ஓர் ஆதாரமாக அவரது உடலுடன் பயணிக்கும் என்பதாலேயே அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

“குற்றக் காட்சியைப் பாதுகாக்க யாரும் அங்கு இல்லை. அது எனக்கு ஒரு பெரிய, பெரிய மனக்கவலையாக இருந்தது,” என்று டைம்ஸிடம் லாண்டிஸ் கூறினார்.

“இதெல்லாம் மிக விரைவாக நடந்து கொண்டிருந்தது. என்னை அதிக பயம் சூழ்ந்துகொண்டது. அது ஒரு முக்கிய ஆதாரம் என்பதை உணர்ந்தேன். அது மிக முக்கியமான ஆதாரம். அது மறைந்து போவதையோ அல்லது தொலைந்து போவதையோ நான் விரும்பவில்லை,” என்று அவர் தொடர்ந்தார்.

லாண்டிஸ் இந்தத் தகவலை இதுவரை எப்போதும் வெளியிடவில்லை. வாரன் விசாரணை ஆணையம் அவரிடம் ஒருபோதும் விசாரணை செய்யவில்லை. மேலும், அவர் அந்த விவரத்தை எந்த அதிகாரப்பூர்வ வழியிலும் வெளியிடவில்லை.

“அவர் முற்றிலும் தூக்கம் இல்லாமல் இருந்தார். இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது. மேலும் கடுமையான PTSD நோயால் அவர் அவதிப்பட்டார்,” என்று பிபிசியிடம் ராபெனால்ட் கூறினார்.

“அவர் தோட்டாவை பற்றி மறந்துவிட்டார்,” என்று லாண்டிஸை நேர்காணல் செய்வதில் குறிப்பிடத்தக்க நேரத்தைச் செலவிட்ட ராபெனால்ட் அண்மையில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

“அவர் அப்போது நீடித்துக்கொண்டிருந்த குழப்பமான சூழ்நிலைக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டார்.”

அதன் பிறகு, பல ஆண்டுகளாக கென்னடி படுகொலை செய்யப்பட்டது, அல்லது அதற்குத் தூண்டிய சதி போன்ற செய்திகளைப் பற்றி படிப்பதை லாண்டிஸ் தவிர்த்து வந்தார். அவர் தனது கதையை உலகுக்குச் சொல்லத் தயாராக இருப்பதாக முடிவு செய்யும் வரை அவர் அதில் எந்த கவனத்தையும் செலுத்தவில்லை.

லாண்டிஸ் அளித்த தகவல்களைப் படித்தவர்கள் அதிலிருந்து வேறுபட்ட முடிவுகளைக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்தப் புதிய கதை பல கேள்விகளை எழுப்புகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

லாண்டிஸ் அளித்துள்ள தகவல், “ஒற்றைத் தோட்டா” கோட்பாட்டின் மீதான நம்பிக்கையை உடைத்துவிட்டதாக தான் நம்புவதாக பிபிசியிடம் ராபெனால்ட் கூறினார்.

லாண்டிஸ் இப்போது காரில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாதான் கானலியின் ஸ்ட்ரெட்சரில் காணப்பட்டதாக நம்புகிறார்.

அந்த தோட்டா கென்னடியின் முதுகில் ஆழமாகப் பதிந்திருந்த நிலையில், பின்னர் காரில் விழுந்துவிட்டதாக அவர் நம்புகிறார்.

அவர் சொல்வது சரியென்றால், கானலியும், கென்னடியும் ஒரே தோட்டாவால் தாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று ராபெனால்ட் கூறுகிறார்.

துப்பாக்கி ஏந்திய நபரான லீ ஹார்வி ஓஸ்வால்ட் தனியாக செயல்பட்டாரா என்பது பற்றிய சந்தேகத்தை இதன்மூலம் மீண்டும் எழுப்ப முடியும் என்று அவர் நம்புகிறார்.

இருவரின் உடல்களிலும் காயங்களை ஏற்படுத்தியது ஒரு தோட்டா அல்ல என்றால், ராபெனால்ட் பத்திரிக்கைக்கு அளித்த தனது விரிவான பேட்டியில், ஓஸ்வால்ட் பயன்படுத்திய துப்பாக்கியால் இவ்வளவு விரைவாக இரண்டு முறை சுட்டிருக்க முடியுமா என்று கேட்கிறார்.

லாண்டிஸுக்கு அன்று தன்னுடன் பணியாற்றிய ஒருவர் உட்பட பலர் மீதும் மிகத் தீவிரமான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், அதிபரை பாதுகாப்பதற்காக கென்னடியின் காரின் பின்புறத்தில் குதித்த பாதுகாவலரான கிளின்ட் ஹில், லாண்டிஸ் கூறுவதை நம்ப மறுக்கிறார்.

“அனைத்து ஆதாரங்கள், அறிக்கைகள், நடந்த விஷயங்கள் அனைத்தையும் சரிபார்த்தால், அவை வரிசையாக இல்லை. அவர் அதை அதிபரின் ஸ்ட்ரெட்சரில் வைக்க முயன்றார் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை,” என்று என்.பி.சி. (NBC) நியூஸிடம் கிளின்ட் ஹில் கூறினார்.

‘கேஸ் க்ளோஸ்டு: லீ ஹார்வி ஓஸ்வால்ட் அண்ட் அஸ்ஸாஸினேசன் ஆஃப் ஜே.எஃப்.கே.’ (Case Closed: Lee Harvey Oswald and the Assassination of JFK) என்ற நூலின் ஆசிரியரும், புலனாய்வு பத்திரிக்கையாளருமான ஜெரால்ட் போஸ்னர், லாண்டிஸின் கதை உண்மையில் “ஒற்றை தோட்டா” தியரிக்கு ஆதரவாக உள்ளது என்கிறார்.

“ஆனால் மக்களுக்கு இப்போது கானலியின் ஸ்ட்ரெட்சருக்கு எப்படி அந்த தோட்டா வந்தது என்ற சந்தேகம் ஏற்படும்,” என்று அவர் கூறுகிறார்.

மேலும், “அவரது கூற்று தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்,” என்றும் போஸ்னர் கூறுகிறார். ஆனால் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு லாண்டிஸின் நினைவுகளின் உறுதிப்பாடு குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் இறுதி ஊர்வலம் ஒளிபரப்பப்படுவதை பார்க்கும் பொதுமக்கள்

உதாரணமாக, பார்க்லேண்ட் மருத்துவமனையில் கென்னடியுடன் அவசர சிகிச்சை அறைக்குள் இருந்தவர்கள் அளித்த தகவல்களை போஸ்னர் சுட்டிக்காட்டினார். லாண்டிஸ் அங்கு இருந்ததை யாரும் குறிப்பிடவில்லை, என்று அவர் கூறுகிறார்.

இந்தத் தகவலை வெளிப்படுத்த லாண்டிஸ் ஒருபோதும் முன்வரவில்லை என்பது அவரது அன்றைய நடத்தை பற்றிய கேள்விகளை எழுப்புவதாக போஸ்னர் கூறுகிறார்.

“ஆனால், அவர் தவறான விஷயங்களைச் சொல்ல முடியும். இருப்பினும், அடிப்படை உண்மை என்னவென்றால், ‘நான் ஒரு தோட்டாவை பார்த்தேன். பின்னர் நான் அதை எடுத்து என் பாக்கெட்டில் வைத்து, மருத்துவமனையில் இருந்து வெளியேறும் முன்பாக அதை அதிபரின் ஸ்ட்ரெட்சரில் விட்டுவிட்டேன்’ என்கிறார் அவர். அது உண்மையா இல்லையா?” என போஸ்னர் கேட்கிறார்.

லாண்டிஸ் ஒரு புதிய மர்மத்தை மீண்டும் கிளப்புகிறாரா, அல்லது ஏற்கெனவே உள்ள சாதாரண உண்மையை உறுதிப்படுத்துகிறாரா இல்லையா என்பது அவர் வெளிப்படுத்தும் தகவலின் பின்னால் உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இது முன்னாள் அதிபர் கென்னடியின் படுகொலை. மேலும் லாண்டிஸ் அளிக்கும் தகவல் அமெரிக்காவின் மிகப்பெரிய தேசிய அதிர்ச்சிகளில் ஒன்றின் தொடர்ச்சியான விவாதங்களில் இருந்து உண்மையைப் பிரித்தெடுப்பதை உறுதி செய்யும்.

“அனைவரும் 100% திருப்தி அடையும் வகையில் அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறாரா லாண்டிஸ்? நிச்சயமாக இல்லை,” என போஸ்னர் கூறினார்.

“இந்த விவாதங்கள் ஒருபோதும் முற்றுப் பெறாது. முன்னாள் அதிபர் கென்னடி கொலை தொடர்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு முடிவு ஒருநாளும் எட்டப்படாது,” என்கிறார் போஸ்னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.