;
Athirady Tamil News

ஜோ பைடன் மீது இம்பீச்மென்ட் நடவடிக்கைக்கு விசாரணை துவக்கம்!!

0

ஆட்சியமைப்பிலும், நீதித்துறையிலும் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டிருந்தாலும் அவர்களை உடனடியாக ஒரு உத்தரவின் மூலம் பதவியிலிருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அது உறுதியானதும் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விவாதங்கள் நடைபெற்று ஒருமித்த சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில்தான் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். இது அரசியலமைப்பில் இம்பீச்மென்ட் (impeachment) எனப்படும். இரு நாட்களுக்கு முன், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) அந்நாட்டில் இம்பீச்மென்ட் நடவடிக்கையை தொடங்க முன்மொழிந்துள்ளார்.

உதவி ஜனாதிபதியாக 2009-லிருந்து 2017 வரை பதவி வகித்தபோது ஜோ பைடன், தனது மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) செய்து வரும் பல தொழில்களிலிருந்து, குறிப்பாக உக்ரைன் நாட்டின் பரிஸ்மா (Burisma) எனும் நிறுவனத்திலிருந்து சட்டவிரோதமாக லாபம் அடைந்தார் என பைடன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து சுமார் ரூ.165 கோடிகள் ($20 மில்லியன்) அளவிற்கு பைடன் குடும்பத்தினர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர் என தெரிய வந்திருக்கிறது. இருப்பினும், பயனாளிகளில் பைடனின் பெயர் இருப்பதை உறுதி செய்ய தற்போது வரை எந்த நேரடி ஆவணங்களும் கிடைக்கவில்லை என தெரிகிறது. குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இதற்கான கமிட்டியின் தலைவர் ஜேம்ஸ் கோமர் (James Comer) தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக ஜோ பைடன் மீது சுமத்தி வருகிறார். இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் இந்திய ஜனாதிபதி ஆகியோர் இம்பீச்மென்ட் முறையில்தான் பதவியிலிருந்து நீக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.