இந்திய இளம் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இளைஞர்!!
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது இன்றைய பேஷனாக மாறிவிட்டது. ஆன்லைனில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்றாலும், இந்திய நிறுவனங்களும் அதில் போட்டிபோட தொடங்கிவிட்டன. அவற்றில் வீடு தேடி சென்று மளிகை பொருட்களை வழங்கும் செப்டோ நிறுவனமும் ஒன்று. செப்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா.
பெங்களூருவை சேர்ந்த இவர் உலக இளம் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர் ஆவார். 21 வயதே ஆன இந்திய இளம் பணக்காரர்கள் பட்டியலில் இவர் முதல் இடத்தில் உள்ளார். கைவல்யா வோஹ்ரா மற்றும் அவரின் நண்பர் ஆதித் பாலிச்சா இருவரும் சேர்ந்து மும்பையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டோ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக கைவல்யாவும், ஆதித் பாலிச்சா தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். இப்போது இந்தியாவின் மிக வேகமாக வளரும் இ-மளிகை நிறுவனமாக செப்டோ மாறியுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவின் இளம்பணக்காரர்கள் பட்டியலில் கைவல்யா வோஹ்ரா 1,036-வது இடத்தில் இருந்தார், அவரின் நிகர மதிப்பு ரூ1,000 கோடி. 2022-ம் ஆண்டு ஒய்.சி. கன்டினியூட்டி பண்ட் என்ற நிறுவனம் 200 மில்லியன் டாலரை செப்டோ நிறுவனத்தில் முதலீடு செய்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஆண்டில் 900 மில்லியன் டாலராக உயர்ந்தது.
அதற்கு முன்பு 2021-ம் ஆண்டு டிசம்பரில் செப்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 570 மில்லியன் டாலராக இருந்தது. கைவல்யா வோஹ்ரா கர்நாடக மாநிலத்தில் 2003-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி பிறந்தார். பெங்களூருவில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். கைவல்யா வோஹ்ராவுக்கு இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய 3 மொழிகள் தெரியும். செப்டோவைத் தொடங்குவதற்கு முன், கைவல்யா வோஹ்ரா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பில் சேர அட்மிஷன் கிடைத்தது. கைவல்யா வோஹ்ரா கணினி அறிவியல் பொறியியல் படிப்பைத் தொடர ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.
இருப்பினும், கைவல்யாவும், ஆதித் பாலிச்சாவும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி இ-மளிகை நிறுவனத்தை தொடங்கினர். கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா ஆகியோர் ஸ்டான்போர்டில் சேர்ந்தபோது துபாயில் வசித்து வந்தனர், ஆனால் இருவரும் ஆன்லைன் புரோகிராம் ஒன்றில் கலந்துகொண்ட பிறகு மும்பைக்குத் திரும்ப முடிவு செய்தனர். கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் ஆகியோர் இணைந்து கிரன்கார்ட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினர். மும்பை முழுவதும் 45 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை வழங்குவதாக உறுதியளித்தனர்.
பின்னர், அவர்கள் கிரன்கார்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஒரு பகுதியாக செப்டோவை நிறுவினர். இந்த நிறுவனம் டெல்லி, சென்னை, குர்கான், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 10 பெரிய நகரங்களில் செயல்படுகிறது. இவற்றில் 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் ஆகியோர் போர்ப்ஸ் இதழின் செல்வாக்குமிக்க ’30 அண்டர் 30′ இ-காமர்ஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.