அறைக்குள் பெட்ரோலை ஊற்றி மகன்-பேரனை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளி!!
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தி சிரக்காகோடுபகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 65). கூலித்தொழிலாளி.இவரது மகன் ஜோஜி (38). இவருக்கு லிஜி (32) என்ற மனைவியும், டெண்டுல்கர் (12). ஜான்சன் மற்றும் அவரது மகனின் குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஜான்சன் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். அங்கு வெளிப்பக்கமாக பூட்டப் பட்டிருந்த அறையை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஜோஜி, அவரது மனைவி லிஜி, மகன் டெண்டுல்கர் ஆகியோர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இது குறித்து மண்ணுத்தி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடல் கருகி கிடந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்பு ஜான்சனை தேடியபோது விஷம் குடித்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோஜி, அவரது மகன் டெண்டுல்கர் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது ஜான்சன் தனது மகன், பேரன், மருமகள் ஆகியோரை பெட்ரோல் ஊற்றி உயிேராடு தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று ஜோஜி, தனது மகன் மற்றும் மனைவியுடன் ஒரு அறையில் படுத்து தூங்கி இருக்கிறார். அப்போது ஜான்சன் அந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டி இருக்கிறார்.
பின்பு மகன் குடும்பத்தினர் படுத்திருந்த அறைக்குள் ஜன்னல் வெளியே வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதனால் அறைக்குள் படுத்திருந்த ஜோஜி உள்பட 3 பேரும் மீதும் தீப்பிடித்து எரிந்தது.மகன் குடும்பத்தினர் படுத்திருந்த அறைக்கு தீ வைத்த ஜான்சன், பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விஷம் குடித்துள்ளார். ஜான்சன் எதற்காக மகன், பேரன், மருமகளை உயிரோடு தீ வைத்து எரித்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், தந்தை-மகனுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவித்தனர்.
இதனால் குடும்ப தகராறு காரணமாக மகன் குடும்பத்தினரை எரித்து விட்டு ஜான்சன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஜான்சன் சிகிச்சையில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அவரது உடல் தேறியதும், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஜோஜியின் மனைவி லிஜி கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மகன் குடும்பத்தினரை உயிரோடு எரித்து விட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.