மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்!!
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இங்கு வன்முறை இன்னும் முழுமையாக ஓயவில்லை. இந்த நிலையில் உயிரிழப்பு, சேதம் குறித்த தகவல்களை ஐ.ஜி.க்கள் வெளியிட்டுள்ளனர். ஐ.ஜி. (செயல்பாடுகள்) ஐ.கே. முய்வா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மணிப்பூரில் இந்த சவாலான நேரத்தில் காவல்துறை, மத்தியப் படைகள் மற்றும் சிவில் நிர்வாகம் ஆகியவை இயல்பு நிலை திரும்ப 24 மணி நேரமும் முயற்சி செய்து வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க முடியும். வன்முறையின்போது, ஆயுத கிடங்குகளில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுவரை 1,359 துப்பாக்கிகள் மற்றும் 15,050 வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
5,172 தீவைப்பு சம்பங்கள் நடைபெற்றுள்ளன. 254 கிறிஸ்தவ ஆலயங்கள், 132 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பிஷ்னுபுர் மாவட்டம் பௌகாக்சாயோ இகாயில் இருந்து சுரசந்த்புர் மாவட்டம் கங்வாய் வரையிலான பாதுகாப்பு தடுப்புகள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.ஜி. (நிர்வாகம்) கே. ஜெயந்தா கூறியிருப்பதாவது:- 175 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 79 உடல்கள், உறவினர்களால் உரிமைக்கோரப்பட்டுள்ளது.
96 பேர் உடல்கள் உரிமைக்கோரப்படவில்லை. இம்பாலில் உள்ள மருத்துவமனைகளில் 56 உடல்களும், சுரசந்த்புர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 42 பேர் உடல்களும் வைக்கப்பட்டுள்ளது. 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஜெயந்தா தெரிவித்துள்ளார். மண்டலம்-3 ஐ.ஜி. நிஷித் உஜ்வால் கூறியிருப்பதாவது:- தேசிய நெடுஞ்சாலை 32, தேசிய நெடுஞ்சாலை 2 ஆகியவற்றில் தற்போது வழக்கமான முறையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.