;
Athirady Tamil News

மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா?- அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!!

0

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- அண்ணா, தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர செய்து இயல் இசை நாடக தமிழில் பன்மொழி தன்மை பெற்றவர், ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் சரளமாக பேசுபவர்.

தமிழன் பெருமையை உலகத்திற்கு உணர்த்தியவர். உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க கூடிய வகையில் பேச்சு ஆற்றல் எழுத்து ஆற்றல் கொண்டவர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்ப உழைத்தவர்.அண்ணா வழியில் கழகம் வெற்றி நடைபோடுகிறது.

பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கூட்டணி கட்சி சந்திப்பு காலம் காலமாக இருக்கும் நடைமுறை தான். எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது. அதனால் கூட்டணி கட்சி தலைவரை பொதுச்செயலாளர் சந்தித்து பேசினார். தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குழு கூடி தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு, அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழும் நிலையில் உள்ளனர்.

அண்ணாமலை அவர் கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும். அண்ணா பற்றி பேசியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவிக்கிறோம், அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் எதிர்வினையை சந்திக்க நேரிடும்.மீண்டும் பேசினால் அ.தி.மு.க. தக்க பதிலடி கொடுக்கும். நடக்காத விசியத்தை சொல்லி அண்ணா பெயரை களங்கப்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.