மருத்துவத்தில் மாபெரும் புரட்சி: மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் !!
மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திய அமெரிக்க அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் 61 நாள்கள் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டுள்ளனர்.
இனங்களுக்கு இடையிலான மாற்று அறுவைச் சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது.
அமெரிக்காவில் 103,000 பேர் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களில் 88,000 பேருக்குச் சிறுநீரக அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மிக அணுக்கமான கண்காணிப்பும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் பல்கலைக்கழகத்தின் மாற்று அறுவைச் சிகிச்சைத் துறை இயக்குநர் மருத்துவர் ராபர்ட் மோண்ட்கோமரி (Dr Robert Montgomery) கூறியுள்ளார்.
xenotransplant என்றழைக்கப்படும் இந்த அறுவைச் சிகிச்சையை மருத்துவர் மோண்ட்கோமேரி 5ஆவது முறையாகச் செய்துள்ளார்.
2021இல் அவர் உலகின் அத்தகைய முதல் மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்றிகளின் உறுப்புகள் சிறியவையாக இருப்பதாலும் பன்றிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் இப்போதைக்கு அவைதான் மனிதனுக்கு உடலுறுப்பு தானம் செய்ய ஏற்றவையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.