தெலுங்கானாவில் 9 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் முதல்வர் கே.சி.ஆர்!!
தெலுங்கானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது நிறுவ வேண்டும் என்ற அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாக, தெலுங்கானா முதல்வர் முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ் 9 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார். காமரெட்டி, கரீம்நகர், கம்மம், கும்ரம் பீம் ஆசிபாபாத், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, ஜங்கான், நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் விகாராபாத் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், முதல்வர் கே.சி.ஆரின் மருமகன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியதாவது:- நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தெலங்கானாவில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 26-ஐ எட்டியுள்ளது. மேலும், 8 கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளன. 2014-ல் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 2,850 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 8,515 ஆக அதிகரித்து உள்ளது. அடுத்த எட்டு புதிய கல்லூரிகள் திறப்பு விழாவுடன் மாநிலத்தில் ஆண்டுக்கு 10,000 மருத்துவர்களை உருவாக்கும். 2014ல் மாநிலத்தில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை 17,000 ஆக இருந்தது. தற்போது அது 34,000ஐ எட்டியுள்ளது. அந்த எண்ணிக்கை விரைவில் 50,000 ஐ எட்டும், மேலும் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து 50,000 படுக்கைகளும் விரைவில் ஆக்ஸிஜன் வசதிகளைக் கொண்டிருக்கும்.
எந்த நெருக்கடியான சூழலையும் சமாளிக்க தெலுங்கானா 500 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதுடன், பாராமெடிக்கல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க நர்சிங் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களை நிறுவுமாறு சுகாதார அமைச்சர் டி. ஹரிஷ் ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரம் தொடர்பான குறிகாட்டிகளில் எஐடிஐ ஆயோக் வழங்கிய தரவரிசையில் தெலுங்கானா 2014ல் 11 வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. மாநிலத்தில் தாய் இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.