உலகின் மிகப்பெரிய மாநாட்டு மையத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!!
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உலகிலேயே மிகப்பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (International Convention And Expo Centre) ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். “யஷோபூமி” என பெயரிடப்பட்டுள்ள இம்மையம் “மைஸ்” எனப்படும் சந்திப்புகள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (Meetings, Incentives, Conferences, and Exhibitions) ஆகிய நோக்கங்களுக்கான மையமாக 8.9 லட்சம் சதுர மீட்டர் திட்ட மதிப்பீட்டில், 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பில் அமையவுள்ளது. இதில் அமையவுள்ள மாநாட்டு மையம் 15 மாநாட்டு மையங்களை உள்ளடக்கி மொத்தமாக 73,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். இதில் ஒரு முக்கிய கருத்தரங்க மண்டபமும், கலைநிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய அரங்கமும், 13 சந்திப்பு அறைகளும் என சுமார் 11 ஆயிரம் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் வகையில் அமையவுள்ளது.
மைய கருத்தரங்க மண்டபம் சுமார் 6 ஆயிரம் விருந்தினர்கள் ஒன்றாக அமரும் வகையில் உள்ளது. கலைக்கூட அரங்கில் 2500 விருந்தினர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த சந்திப்புக்களை நடத்தும் வகையில் 8 தளங்களில் 13 சந்திப்பு கூடங்கள் அமைக்கப்படுகிறது. 1.07 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உலகிலேயே பெரிய கண்காட்சிக்கூடமும் அமையவுள்ளது. மழைநீர் சேகரிப்புக்கான வசதி, மறுசுழற்சி மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு, சோலார் மின்சார வசதி என பசுமைவழி சார்ந்த முறைகளில் இயற்கையோடு இணைந்தவழியில் திட்டம் முழுவதும் கையாளப்பட்டுள்ளது.
புதுடெல்லியின் துவாரகா செக்டார் 21-ல் உள்ள டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ விரைவு ரெயில் நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இணைப்பு வசதியை துவாரகா செக்டார் 25-ல் உருவாக்கப்பட்டுள்ள புது மெட்ரோ ரெயில் நிலையத்தையும் நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த புதுரெயில் நிலையம் வழியாக யஷோபூமி, டெல்லி விமான நிலைய மெட்ரோவுடன் இணைக்கப்படவுள்ளது. மெட்ரோ வழியாக புதுடெல்லியிலிருந்து யஷோபூமிக்கு செல்ல 21 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.