உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் நாடுகள்! அதிகரிக்கும் நெருக்கடி !!
உக்ரைனிலிருந்து தானியங்களை இறக்குமதி செய்வதற்கு போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் சொந்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்டை நாடுகளிற்கு தானிய இறக்குமதிகளை முன்னெடுப்பது தொடர்பான தடைகளை நீடிக்காது இருப்பதற்கு முடிவு செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் (15) மேலே குறிப்பிட்ட நாடுகள் தங்களது சொந்த தடையினை அறிவித்துள்ளன.
உக்ரைன் மீது 2022 ரஸ்யாவின் படையெடுப்பு ஆரம்பமான காலத்திலிருந்தே உக்ரைனின் தானிய ஏற்றுமதி சரிவை சந்தித்து வருகிறது.
அதற்கு முந்தைய காலங்களில் உலகின் சிறந்த தானிய ஏற்றுமதியாளர்களில் ஒருவராக உக்ரைன் விளங்கியது.
அண்மையில் கருங்கடல் துறைமுகங்கள் வழியாக, உணவு தானியங்களை அனுப்ப முடியாத நிலை உருவானதே இந்த பின்னடைவுக்கு காரணமாகியிருக்கிறது.
அதுமாத்திரமல்லாமல் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து உக்ரைனிய விவசாயிகளின் நிலைமையும் மோசமாகிவிட்டது.
இந்நிலையினை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உக்ரைனின் அண்டை நாடுகள் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கான விலைகளை குறைத்துள்ளமை உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை பாதித்திருக்கிறது.
இதனையடுத்து உக்ரைனில் இருந்து விவசாய இறக்குமதியை அதன் அண்டை நாட்டு அரசாங்கங்கள் தடை செய்துள்ளன.
விவசாயிகள் தங்கள் பயிர்களை அறுவடை செய்து விற்கத் தயாராகவுள்ள நிலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது விவசாயிகளுக்கு பெரும் இடரை ஏற்படுத்தியுள்ளது.
தவிரவும் இந்த தடை உத்தரவு தொடர்ந்தால் அது உணவு மற்றும் தானிய பற்றாக்குறையை ஏற்படுத்தி உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடிகளை உருவாக்க வழிசமைக்கும் என்றும் எதிர்வுகூறப்படுகிறது.