விவேக் ராமசாமி “ஆதிக்க மனோபாவம்” உடையவர்: முன்னாள் ஊழியர்கள் புது தகவல்!!
2024 தேர்தலுக்காக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் அவர் மீது பல கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவியில் அமர்வது சிக்கலாக இருக்கும் என தெரிகிறது. அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 38-வயதான விவேக் ராமசாமி எனும் இளம் தொழிலதிபர் முன்னிலை வகிக்கிறார். தனது அதிரடி கருத்துக்களுக்காகவும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த போவதாக கூறும் சில துணிச்சலான திட்டங்களுக்காகவும் அவர் மிகவும் பாராட்டப்படுகிறார்.
தான் அதிபரானால் மத்திய அரசாங்கத்தின் பணியாளர்களை 75 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க போவதாகவும் தற்போது முக்கிய துறைகளாக கருதப்படும் பல துறைகளை கலைத்து விட போவதாகவும் விவேக் தெரிவித்தார். பல துறைகளிலும் சுமார் 21 லட்சம் (2.25 மில்லியன்) பணியாளர்கள் உள்ள அமெரிக்க மத்திய அரசாங்கத்தில், விவேக் ராமசாமி 16 லட்சம் பேர்களை (1.6 மில்லியன்) நீக்கி விட்டு அதன் மூலம் மிக பெரும் தொகை செலவாவதை தவிர்க்க போவதாக அறிவித்தார். இந்நிலையில், விவேக் நடத்தி வரும் ரொய்வன்ட் சயின்ஸ் மற்றும் ஸ்ட்ரைவ் அசட் மேனெஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களில் பணி புரிந்த சில முன்னாள் ஊழியர்களில் 7 பேர் அவரது மனநிலை குறித்து கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும், விவேக் “ஆதிக்க மனோபாவம்” உடையவர் என குறிப்பிட்டுள்ளனர். தனக்கு பணி செய்வதற்காகவே ஊழியர்கள் உள்ளதாக அவர் நினைப்பவர் என்றும், கடுமையான சட்டதிட்டங்களை வகுப்பவர் என்றும், அறையின் வெப்பத்தை மிகவும் குளிரான நிலையிலேயே வைப்பவர் என்றும், பயணத்தின் போது ஒரு விமானம் ரத்தானால் மற்றொன்றில் உடனடியாக பயணிக்கும் வகையில் இன்னொரு விமானத்திற்கான ஏற்பாட்டை முன்னரே செய்து கொள்பவரகவும், முன்னாள் ராணுவ ரேஞ்சர் ஒருவரை தன்னுடனேயே மெய்காப்பாளராக வைத்து கொண்டவராகவும் விமர்சிக்கின்றனர். மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்டவராக சித்தரிக்கபட்டாலும், விவேக் தற்போது தீவிர பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.