காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்.. இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து போராடனும்.. சோனியா காந்தி!!
கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் உச்ச பட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். மறுசீரமைக்கப்பட்ட காரிய கமிட்டியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மொத்தம் 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, பா.ஜ.க.-வை வீழ்த்துவதற்கு இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் வகையில், நாடு முழுக்க 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. இந்த கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அக்டோபர் 2-ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் நடைபெற இருந்தது.
எனினும், இந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் இன்று அறிவித்து இருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், பொதுக்கூட்டம் எங்கு, எப்போது நடைபெறும் என்பது பற்றிய இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்து இருக்கிறார்.