திருப்பதி பிரம்மோற்சவ விழா: பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 6 லட்சம் லட்டுகள் தயார்!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கோலாகலத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு அங்குரார்பணம் நடைபெறுகிறது. நாளை முதல் வரும் 26-ந் தேதி வரை 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெறும். பிரம்மோற்சவ விழா முதல் நாளான நாளை ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார். பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 22-ந் தேதி நடக்கிறது. கருட சேவை அன்று சுமார் 2 லட்சம் பக்தர்களை 4 மாட வீதிகளில் அனுமதிக்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
23-ந் தேதி தங்கத்தேர் பவனி மற்றும் 26-ந் தேதி தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குழுவார்கள் என்பதால் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 6 லட்சம் லட்டுக்கள் தயார் செய்து வைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.