;
Athirady Tamil News

73-வது பிறந்தநாள்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!

0

பிரதமர் நரேந்திரமோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இரக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகிய தலைமைப் பண்புகளே பிரதமர் மோடியை தொலை நோக்குப் பார்வையுள்ள பிரதமராக உருவாக்கியுள்ளது. நரேந்திர மோடி தனது கடின உழைப்பின் மூலம் நமது தேசத்தின் உணர்வை உயர்த்தியுள்ளார். அவரது பிறந்தநாளில், அவர் மற்றொரு வெற்றிகரமான பதவிக்காலத்தையும், 100 வருட சேவையும் ஆற்றிட வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- மனதில் உறுதியும், வாக்கினிலே இனிமையும், வாழ்க்கையில் நேர்மையும், ஒளி படைத்த கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சமுமாக, நம் இந்திய தேசத்தின் வெற்றிப் பயணத்திற்கு மாலுமியாக வந்தவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ் தன் தாய்மொழியாக இல்லையே, தன்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று பலமுறை வருத்தம் தெரிவித்தவர் பிரதமர் மோடி. உலக நாடுகளில் எல்லாம் நம் தமிழ் மொழியின் தொன்மையையும் பெருமையையும் எடுத்துக் கூறி மகிழ்ந்தவர் மோடி. அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நம் நாட்டின் நன்மதிப்பையும் புகழையும் பெருமையையும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.

நான்… என்… எனது… என்ற சுயநலம் மிக்க அரசியல்வாதிகளையே பார்த்து பழகிய தமிழக மக்களுக்கு, நாம்… நம்… நமது… என்று நம்பிக்கை தந்தவர் மோடி. நம் மகத்தான தலைவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் 73-ம் பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு நான் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வலிமை ஆகிய வற்றுடன் வாழ்ந்து பொது வாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்து உள்ளார். புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.