;
Athirady Tamil News

கொரிய பெண்களின் பொலிவை விரும்பும் இந்திய பெண்கள்: கொரிய அழகு சாதன பொருட்கள் பலன் தருமா?

0

சமூக ஊடகங்களில் பல ட்ரெண்டுகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் பல, மக்களை ஈர்த்து அதன் பின்னால் இழுத்துச் செல்கிறது. உணவு, உடை, பாடல், மீம்ஸ், நடனம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில், தற்போது கொரியாவின் அழகு சாதனப் பொருட்கள் இந்திய பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரியாவின் பாடல்கள், உடைகள், கே-சீரிஸ் மற்றும் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.

கொரியா மக்களைப் போன்ற பளபளக்கும் கண்ணாடி போன்ற சருமம் (Glass Skin) வேண்டும் என்பதற்காக கொரியாவின் அழகு சாதன பொருட்களைப் பலரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

கொரிய மக்களின் சருமம் எப்படி இவ்வளவு பளபளப்பாக இருக்கிறது என சமீபத்தில் இந்தியர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பேசி வந்த நிலையில், தற்போது கொரியாவின் சருமப் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தியும் அதைப் பற்றி சமூக ஊடகங்களில் பேசி வருகின்றனர்.

ஒருவேளை கொரியர்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கொரிய மக்களைப் போன்ற சருமத்தை நாமும் பெற முடியுமா?

முகப்பரு, தழும்புகள் இல்லாத தோல் கொரிய மக்களிடையே பிரபலமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவமான சருமம் இருக்கும்.

அது அவர்களுடைய சரும பராமரிப்பு, சுற்றுச்சுழல், உணவு, பரம்பரையாக வரும் மரபணு போன்றவற்றைச் சார்ந்து அமையும். அப்படி கொரிய மக்களின் தோல், அந்நாட்டில் நிலவும் குளிர் மற்றும் வறண்ட காலநிலைக்கு மிகவும் மீள்தன்மையுடனும், பொருந்தக் கூடியதாகவும் இருக்கிறது.

எனவே கொரிய நாட்டின் தோல் பராமரிப்புப் பொருட்கள் முதன்மையாக கொரிய மக்களின் சருமத்தைப் பராமரிக்க ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கொரிய மக்கள் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.

டோன்னிங்(Tonning), கிலென்சிங்(Cleansing), எசென்ஸ் ஸ்பிரே(Essence Spray), ஸ்லீப்பிங் மாஸ்க் (Sleeping Mask) என சரும பராமரிப்பு தொடர்பாக தினமும் 10 முதல் 20 வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

இது மட்டுமின்றி இயற்கை சார்ந்தும் பல வழிமுறைகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். குறிப்பாக, முகப்பொலிவுக்காக தர்பூசணி பழத்தின் சிவப்புப் பகுதிக்கும் தோலுக்கும் இடையிலான வெள்ளைப் பகுதியை (Rind) தங்கள் முகத்தில் தேய்த்துக்கொள்கின்றனர்.

கொரிய மக்களைப் பொருத்தவரை பெண்களுக்கு நிகராக ஆண்களும் தங்களின் சரும பராமரிப்பில் அக்கறை செலுத்துகின்றனர்.

கொரியாவின் அழகு சாதன பொருட்கள் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களால் நிறைந்தவை. சரும எரிச்சல், ரத்த ஓட்டத்தை மேம்படுத்த, இறந்த செல்கள் மீண்டும் புத்துயிர் பெற , பிற தோல் நோய்களை அகற்றுவது போன்றவற்றில் கொரிய அழகுசாதனங்கள் அந்நாட்டு மக்களுக்கு சிறந்த பலனை தருகின்றன என்று கூறப்படுகிறது.

கொரியாவில் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பொருட்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

தற்போது பல அழகு சாதன நிறுவனங்களும் நத்தை திரவத்தை பிரதானமாக வைத்து தங்களது பொருட்களைத் தயாரிக்கின்றன. இதைக் கேட்க உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.

நத்தைகளில் சுரக்கும் தெளிவான, மெல்லிய, பிசுபிசுப்பான திரவம் சருமத்தைப் பிரகாசமாக்கவும், சருமத்தின் வயதாகும் தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த திரவத்தை வயது, பாலின வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

தேனீக்களில் இருந்து கிடைக்கும் இந்தப் பிசினை ஆங்கிலத்தில் ப்ரோபோலிஸ் (propolis) என்று குறிப்பிடுகின்றனர். தோலின் சுருக்கத்தை நிவர்த்தி செய்வதோடு, பாக்டீரியா பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு, முகப்பரு பாதிப்புக்குள்ளான தோல், தோல் வெடிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் புரோபோலிஸ் உள்ளது.

இதில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக இருப்பதால், புரோபோலிஸ் தோல் எரிச்சலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

புரோபோலிஸ் சருமத்தில் ஒரு நுட்பமான பளபளப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து தடவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி இளமையான தோற்றத்தைப் பெற முடியும் என்றும் கருதப்படுகிறது.

முத்துகள் நீண்டகாலமாகவே கொரிய அழகு சாதனப் பொருட்களில் அத்தியாவசியமான பொருளாக இருந்து வருகின்றன.

முகப்பருவை சமாளிக்க உதவுவதோடு, முகத்தில் விரிவடைந்து காணப்படும் துளைகளைக் குறைக்கவும் முத்துக்கள் உதவுகின்றன. மேலும் சருமம் மூப்படைவதையும் தடுக்கிறது.

தேனீக்களின் விஷம் அமில தன்மையுடையது. தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அவற்றை தேனீக்கள் வெளியேற்றும். பல தோல் பராமரிப்பு நிறுவனங்கள் சீரம் மற்றும் மாய்ஸ்சரைசர் போன்ற பொருட்களில் தேனீ விஷத்தைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன.

இந்த மூலப்பொருள் தோல் ஆரோக்கியத்தைப் பல வழிகளில் மேம்படுத்துகின்றன. இதில் வீக்கத்தைக் குறைத்தல், பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளை வழங்குதல் மற்றும் சுருக்கங்களைக் குறைத்தல் ஆகிய பண்புகள் உள்ளன.

இதேபோல் மூங்கில், யூசா( ஒரு வகை பழம்), சென்டெல்லா ஆசியாட்டிகா (centella asiatica), பிர்ச் (birch) என்ற மரத்தின் சாறு போன்ற பல பொருட்கள் கொரிய அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

கொரிய அழகு சாதன பொருட்கள் கொரியர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்தாலும் தங்களுக்கு அவை பெரிதாகப் பலனளிக்கவில்லை என்று அவற்றைப் பயன்படுத்திய இந்திய பெண்களில் சிலர் கூறுகின்றனர்.

கோவையைச் சேர்ந்த மாடலும் அழகு குறிப்புகள் தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டு வருபவருமான (Fashion Blogger) சௌந்தர்யா இதுதொடர்பாகக் கூறுகையில், “நான் இரண்டு ஆண்டுகளாக கொரிய அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தி வருகிறேன். இவற்றை ஆன்லைனில் வாங்குவேன்.

பெங்களூருவில் கொரிய அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே தனி கடைகள் உள்ளன. அங்கு சென்றும் வாங்குவேன். இதுவரை எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அதேநேரத்தில் சருமம் வழக்கம் போலத்தான் இருக்கிறது. பெரிதாக மாற்றம் எதுவுமில்லை,” என்றார்.

கொரிய அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தனக்கும் எதிர்பார்த்தபடி பெரிய வித்தியாசம் தெரியவில்லை என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிருஷ்ண பிரியா.

“நான் பல ஆண்டுகளாக கே-சீரிஸ் பார்த்து வருகிறேன். அதிலிருந்து அவர்களின் சருமம் மீதான வியப்பு இருந்துகொண்டே இருந்தது. கொரிய அழகு சாதன பொருட்களை முதலில் சமூக ஊடகம் மூலமாகத்தான் அறிந்தேன்.

பிறகு ஆன்லைனில் சீரம்(Serum) ஒன்று வாங்கிப் பயன்படுத்தினேன். கண்ணாடி போன்ற சருமம் என இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஈர்க்கப்பட்டு வாங்கினேன். ஆனால் எதிர்பார்த்த அளவில் பயனளிக்கவில்லை,” என அவர் கூறுகிறார்.

“ஆன்லைன் மூலமாக ஒரு கொரிய ஃபேஸ் வாஷ் வாங்கினேன். அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1500. ஆனால் எதிர்பார்த்த அளவு பலனளிக்கவில்லை. எனவே, மீண்டும் அவ்வளவு விலை கொடுத்து அதை வாங்க நான் முயலவில்லை” என்கிறார் கல்லூரி மாணவியான ஹர்ஷினி.

இதுகுறித்துப் பேசிய அழகுக் கலை நிபுணரும் தோல் மருத்துவருமான கார்த்திகா, “கொரிய மக்கள் தங்கள் தோலின் மீது அதீதமாக அக்கறை காட்டுகின்றனர். இந்தியர்களின் தோல் அமைப்புக்கும் காலநிலைக்கும் அப்படிச் செய்ய முடியாது,” எனக் குறிப்பிடுகிறார்.

“இளம் பெண்கள் அதிகளவில் கொரிய நெடுந்தொடர்களைப் பார்க்கின்றனர். அதில் வரும் கதாபாத்திரங்களைப் போல் தங்கள் முகமும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், ஒவ்வொரு நாட்டுக்கும் காலநிலை வேறுபடும்.

கொரிய தீபகற்பம் வறண்ட வானிலையைக் கொண்டது. அதனால் அங்கு வசிப்பவர்களின் சருமம் எண்ணெய்ப் பசையின்றி காணப்படுகிறது. இந்தியாவில் வெயில், தூசு, மாசு போன்றவை உள்ளன.

நாம் கொரோனாவுக்கு பின்னர்தான் மாஸ்க் பயன்படுத்துகிறோம். ஆனால், கொரிய மக்களோ மாசு, தூசு போன்றவற்றில் இருந்து தங்களது முகத்தைப் பாதுகாத்துக்கொள்ள பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாஸ்க் பயன்படுத்துகின்றனர்.

மேலும், தங்களது சருமத்தைப் பேணுவதற்கு தினமும் 10 முதல் 20 பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இந்தியர்களால் இதை தினமும் செய்துவர முடியுமா என்பதை நாம் பார்க்க வேண்டும்,” என்றார்.

அழகு சாதன பொருட்களை ஆன்லைன் விமர்சனங்களை படித்துப் பார்த்து வாங்குவதைவிட தங்களுக்குப் பொருத்தமானதா என்பதைப் பார்த்து வாங்குவது சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

“எந்தவொரு அழகு சாதனப் பொருளானாலும் முதலில் தங்களது சருமத்துக்குப் பொருத்தமானதா என்பதை தோல் மருத்துவரின் பரிந்துரையைக் கேட்டு அதற்கு ஏற்ப பயன்படுத்தலாம். ஏனெனில், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் நம் சருமத்திற்கு ஏற்றவையா என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்,” என கார்த்திகா அறிவுறுத்துகிறார்.

ஆரோக்கியமான சருமத்திற்கு முதல் உந்துகோலாகத் திகழ்வது ஆரோக்கியமான உணவுதான் என்று கூறும் மருத்துவர் கார்த்திகா, “சரியான அளவு தண்ணீர் பருகுவது, பழங்கள், காய்கறிகள் உட்கொள்வது என இவை அனைத்தும் ஆரோக்கியமான சருமத்திற்கு வழி வகுக்கும்,” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.