லி ஷாங்ஃபூ: சீன பாதுகாப்பு அமைச்சர் எங்கே? கேள்வி எழுப்பும் அமெரிக்க தூதர்!!
சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ அண்மைகாலமாக பொதுவெளியில் தென்படாதது குறித்து அமெரிக்காவின் உயர்மட்ட தூதரக அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளது, சீன ராணுவத்தின் ஊழல் ஒழிப்பு பற்றிய ஊகங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
ஜெனரல் லி கடந்த இரண்டு வாரங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் காணப்படவில்லை, முக்கியமான பல கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹம் இமானுவேல், லி விவகாரத்தை சுட்டிக்காட்டி சீனாவில் ”வேலையின்மை விகிதம்” மிக அதிகமாக இருப்பதாக ட்விட் செய்தார்.
சீனாவில் சமீபமாக பல உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் லி ஷாங்ஃபூவையும் பல நாட்களாக பொதுவெளியில் காணப்படுவதில்லை.
லி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தங்களுக்கு கிடைத்த தகவல்களை குறிப்பிட்டு ‘தி லால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கடந்த வெள்ளியன்று செய்தி வெளியிட்டது.
வெளியுறவு அமைச்சராக இருந்த ஷின் கேங் கடந்த சில மாதங்களாக பொதுவெளியில் காணப்படாத நிலையில், ஜூலையில் அவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். எனினும், இதற்கான காரணம் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது லியும் பொதுவெளியில் காணப்படுவதில்லை. இது தொடர்பாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்தார்.
கடைசியாக ஆகஸ்ட் 29ஆம் தேதி பீய்ஜிங்கில் நடைபெற்ற ஆப்ரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மன்றத்தில் ஜெனரல் லி காணப்பட்டார். பாதுகாப்பு அமைச்சர்கள் வாரக்கணக்கில் பொதுவெளியில் தென்படாமல் இருப்பது என்பது வழக்கமானதுதான்.
விண்வெளிப் பொறியாளரான லி ஷாங்ஃபூ தனது வாழ்க்கையை செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் ஏவுகணை மையத்தில் தொடங்கினார். ஜெனரல் லி ராணுவத்திலும் சீன அரசியலிலும் படிப்படியாக முன்னேற்றத்தை கண்டவர்.
ஷின்னை போலவே லியும் அதிபர் ஷி ஜின்பிங்கின் விருப்பத்திற்கு உரியவர் என்று கூறப்படுகிறது. ஷின்னுக்கு பிறகு சமீபத்திய மாதங்களில் பொதுவெளியில் தென்படாமல் இருக்கும் இரண்டாவது அமைச்சராகவும் லி இருக்கிறார்.
ஷின் கேங் (வலது), லீ ஷாங்ஃபூ (இடது) இருவருமே அதிபர் ஷி ஜின்பிங்கின் விருப்பத்திற்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது
ஆகஸ்ட் தொடக்கத்தில் சீனாவின் ராக்கெட் படை பிரிவில் இருந்து இரண்டு முக்கிய ஜெனரல்கள் மாற்றப்பட்டபோது ராணுவ ஊழல் குறித்த ஊகங்கள் சமூக ஊடகங்களில் எழுந்தன. ராணுவ நீதிமன்ற தலைவரும் நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அப்பொறுப்பிலிருந்து இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹம் இமானுவேல், ஷின் மற்றும் பிற ராணுவ அதிகாரிகள் காணாமல் போனதை குறிப்பிட்டு ஜெனரல் லி பொதுவெளியில் தென்படவில்லை என்பதையும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
சமீபத்தில் சிங்கப்பூர் கடற்படைத் தலைவர்- சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற சந்திப்பு, வியட்நாம் பயணம் ஆகியவற்றில் லி பங்கேற்காததை சுட்டிக்காட்டி அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இமானுவேல் குற்றஞ்சாட்டினார்.
இமானுவேலின் சமூக ஊடக பதிவுகள் பிரபலமானவை. லி பொதுவெளியில் காணப்படாமல் இருப்பது தொடர்பாக ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் வரும், Something is rotten in the state of Denmark’ என்பதை குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார். ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை குறிப்பிட இச்சொற்தொடர் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த வாரம் வியட்நாம் பாதுகாப்புத் தலைவர்களுடனான சந்திப்பில் லி திடீரென இடம்பெறாமல் போனார். இதற்கு லியின் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது என வியட்நாம் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டது.
2018 ஆம் ஆண்டில், ராணுவத்தின் உபகரண மேம்பாட்டுப் பிரிவின் தலைவராக லி இருந்தபோது, ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை சீனா வாங்கியதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டார்
சிங்கப்பூர் கடற்படைத் தலைவர் சீன் வாட் கடந்த வாரம் சீனா சென்று ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து பேசியிருந்தார். லி தொடர்பாக இமானுவேலின் குற்றச்சாட்டு குறித்து சிங்கப்பூர் கடற்படையிடம் பிபிசி கேட்டது.
சீன அதிகாரிகள் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வார்கள் என்பதால் உடல்நல குறைவு காரணமாக உயர்மட்ட கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பது என்பது அரிதினும் அரிது என கூறப்படுகிறது.
லி தொடர்பாக சர்ச்சை ஏற்படுவது முதல்முறையல்ல. 2018 ஆம் ஆண்டில், ராணுவத்தின் உபகரண மேம்பாட்டுப் பிரிவின் தலைவராக லி இருந்தபோது, ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை சீனா வாங்கியதற்காக அமெரிக்க அரசாங்கம் அவர் மீது தடை விதித்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அமெரிக்கப் பிரதிநிதி லாயிட் ஆஸ்டினை லி சந்திக்க மறுத்ததற்கு இந்த தடையும் காரணமாக பார்க்கப்படுகிறது.
ஜெனரல் லி காணாமல் போயிருப்பது மீண்டும் சீன அரசியல் தலைமையின் ஒளிவுமறைவையும் அதிபர் ஷியின் சில முடிவுகளில் உள்ள நடுக்கத்தையும் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“தற்போதைய தலைமையை தேர்ந்தெடுப்பதற்கு ஒப்புதல் அளித்தது ஷி தான் என்பதால், உயர்மட்ட அதிகாரிகள் காணாமல் போவது, ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் போன்றவை அவருக்கு நல்லதல்ல ” என்கிறார் ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட்டின் சீன அரசியல் நிபுணரான நீல் தாமஸ்.
சீன ராணுவம் மீது நீண்ட காலமாக ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது
அதேநேரத்தில், பாதிக்கப்படும் பணியாளர்கள் யாரும் ஷிக்கு நெருக்கமானவர்கள் இல்லை என்பதால் அவரின் தலைமையும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்திரத்தன்மையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
சீன ராணுவம் மீது நீண்ட காலமாக ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது என்றும் தனக்கு முன்பு இருந்தவர்களைப் போலவே ஷியும் அதனை சமாளிக்க முயன்றதாகவும் ஆய்வாளரான பில் பிஷப் குறிப்பிடுகிறார்.
ஷி அதிகாரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நிலையிலும் இதுபோன்ற உயர்மட்ட ஊழல் இன்னும் உள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் இதற்காக தனக்கு முன்பு இருந்தவர்களை அவர் குறை கூற முடியாது என்றும் பில் பிஷப் தெரிவிக்கிறார்.
ஜெனரல் லி, ஷின் மற்றும் அண்மையில் நீக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் ஆகியோர் அதிபர் ஷி மூலம் பதவி உயர்வு பெற்றவர்கள் என்று குறிப்பிடும் பில் பிஷப், இந்த விவகாரத்தில் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதே தீர்வாக அமையும் என்கிறார்.
தைவான் அருகே ராணுவ நடவடிக்கை அதிகரித்து தென் சீனக் கடலில் பதற்றம் நிலவிவரும் நிலையிலும் இத்தகைய காணாமல் போகும் நிகழ்வுகள் நடந்துவருவதாக சீனாவில் தங்கி ஆய்வு செய்துவரும் இயன் சோங் சுட்டிக்காட்டுகிறார்.
ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட சீன போர்க்கப்பல்கள் சமீப நாட்களாக தைவான் ஜலசந்தியில் அதிகம் காணப்படுகின்றன
ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட சீன போர்க்கப்பல்கள் சமீப நாட்களாக தைவான் ஜலசந்தியில் அதிகம் காணப்படுகின்றன.
வெளிவிவகாரங்களை எதிர்கொள்ளும் முக்கியமான கூறுகளாக ராணுவமும் வெளியுறவு அமைச்சகமும் இருப்பதால், இந்த நேரத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது கவலைக்குரியது என்று டாக்டர் சோங் கூறுகிறார்.
லி தொடர்பான இமானுவேலின் சமூக ஊடக பதிவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், அவர் உயர்மட்ட ராஜாங்க அதிகாரி என்பதோடும் சீனாவோடு சுமூகமற்ற உறவில் உள்ள ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் இருக்கிறார்.
“லி விவகாரம் குறித்து பேசுவதற்கு வெள்ளை மாளிகையில் இருந்து அவருக்கு சமிக்ஞை கிடைத்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பசிபிக் ஃபோரம் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் பிராட் க்ளோசர்மேன் கூறுகிறார்.
“லி காணாமல் போனது தொடர்பாக சீனாவிடம் இருந்து சில பதிலைப் பெற இமானுவேல் முயற்சி செய்கிறார்” என்று டாக்டர் சோங் குறிப்பிடுகிறார்.