தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம்- வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!!
தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை தொடங்கியது. இதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று இரவு காட்பாடி வந்தார். அவருக்கு அமைச்சர் துரைமுருகன் மாவட்ட செயலாளர் ஏ. பி நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பல்வேறு சிறப்புகளை கொண்ட, வீரம் விளைந்த வேலூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. நானும், துரைமுருகனும் கருணாநிதியால் வார்க்கப்பட்டவர்கள்.
முக்கிய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் என்னை வழிநடத்துபவர் துரைமுருகன். விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு பாராட்டுகள். கொட்டும் மழையில் பிறந்ததால்தான் திமுக வேகமாக வளர்ந்து வருகிறது. திமுகவை வாழ வைத்துக் கொண்டிருப்பது தொண்டர்கள்தான். திமுகவின் வளர்ச்சிக்கு தொண்டர்கள்தான் காரணம். தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன் நான். ஒரு குடும்பத்தின் தாய், தந்தையை போன்றவர்கள்தான் கட்சியின் முன்னோடிகள். 2 கோடி கொள்கை வாதிகள் நிறைந்ததுதான் திமுக. பெரியாரும், அண்ணாவும் தத்துவத்தின் அடித்தளம். தென்மாவட்டங்களை திமுகவின் கோட்டையாக மாற்றியவர் ஐ.பெரியசாமி. தமிழகத்தின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் வரி வருவாய்தான். நிதி ஆதாரங்கள் கிடைக்கவிடாமல் தடுக்கவே ஜிஎஸ்டி கொண்டு வந்தனர்.
தமிழகத்தின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. புதிய கல்விக்கொள்கை என மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர். மாணவர்களின் கனவை சிதைக்க கொண்டு வரப்பட்டதுதான் நீட் தேர்வு. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை. மக்களை திசை திருப்ப பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போதுதான் டெண்டர் விட்டுள்ளனர்.
தேர்தல் வரும் நேரத்தில் கண்துடைப்பிற்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிபிஐ அதிகாரிகள் மீது தான் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளது என சிஏஜி அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெற்றி நிலைநாட்ட வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.