டெண்டர் முறைகேடு புகார்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு!!
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடை பெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புதுறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி, 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன்.
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்ப டுகிறது எனவும் கடந்த ஜூலை 18-ந் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வானது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள், அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் இப்போது லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆஜராவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த வழக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாக தி.மு.க. சார்பில் கபில்சிபில் ஆஜராகி இருந்தார் என்றும் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக எப்படி ஆஜராக முடியும்? என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த கபில்சிபில், நான் ஆஜராவது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பிடிக்கவில்லை என்றால் வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றார். கடைசியாக கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? இந்த வழக்கு என்ன? என்பது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கிறோம். அப்போது மீண்டும் வாருங்கள் என்று வழக்கை தள்ளி வைத்தனர். எனவே இந்த வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தெரிகிறது.