பைடனை தொடர்ந்து மஸ்கையும் சந்திக்கும் இஸ்ரேலி பிரதமர்!!
ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பு நாளை அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்கு செல்லும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கவிருக்கிறார். தனது பயண திட்டத்தில் ஜோ பைடன் தவிர உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான அமெரிக்கர் எலான் மஸ்கை சந்திக்கவுள்ளார்.
இது குறித்து எக்ஸ் கணக்கில் நேதன்யாகு தெரிவித்திருப்பதாவது: கலிபோர்னியாவில் எனது பயணத்தை தொடங்க போகிறேன். இந்த நவீன காலகட்டத்திற்கான அதிசயத்தக்க மாற்றங்களின் தலைவரான எலான் மஸ்கை சந்திக்க போகிறேன். அவரிடம் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க போகிறேன். இஸ்ரேலில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துவேன். மனித குலத்தின் அடையாளத்தையும் இஸ்ரேலின் அடையாளத்தையும் மாற்ற கூடிய பயணத்தை மஸ்க் முன்னெடுத்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். “செயற்கை நுண்ணறிவின் அதிவேகமான வளர்ச்சி மனித குல வாழ்வியலுக்கான மிக பெரும் ஆபத்து. அத்துறையில் விளைவுகளை சிந்திக்காமல் மேம்படுத்தி கொண்டே போவது சாத்தானை வரவேற்பதற்கு சமம்” என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இத்துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு போட்டியாக மஸ்க், எக்ஸ்ஏஐ எனும் நிறுவனத்தை கடந்த ஜூலையில் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.