யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம்: மோகன்லால் மீதான விசாரணைக்கு 6 மாதம் தடை!!
பிரபல நடிகர் மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள வீட்டில் இருந்து 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த தந்தங்கள் கேரள வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக மோகன்லால், அவருக்கு தந்தங்களை விற்பனை செய்தவர்கள் உள்பட 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கேரள அரசு சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, வழக்கு விசாரணைக்காக நவம்பர் 3-ந்தேதி மோகன்லால் உள்பட 4 பேரும் ஆஜராக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மோகன்லால், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி குஞ்சு கிருஷ்ணன் விசாரித்து, மோகன்லால் மீதான வழக்கை விசாரிக்க 6 மாதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.