;
Athirady Tamil News

பழைய பாராளுமன்ற கட்டிடத்தை ‘சம்விதன் சதன்’ என அழைக்க வேண்டும்- பிரதமர் மோடி பரிந்துரை!!

0

பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் புதிய எதிர்காலத்திற்கான புதிய தொடக்கங்களை தொடங்க உள்ளோம். வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் இன்று புதிய கட்டிடத்துக்கு செல்கிறோம். இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய பயணத்தை தொடங்குகிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். நமதுஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது. அரசியல் சாசனத்திற்கு பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் மிக்க முடிவுகள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் எடுக்கப்பட்டு உள்ளன. முத்தலாக்கை எதிர்க்கும் சட்டம் இங்கிருந்து ஒற்றுமையாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் முஸ்லீம் தாய்மார்கள் சகோதரிகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் திருநங்கைகளுக்கு நீதி வழங்கும் சட்டத்தையும் பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. மாற்று திறனாளிகளுக்கு ஒளி மயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை நாங்கள் ஒற்றுமையாக நிறைவேற்றி உள்ளோம். பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு முக்கியமானதாக இருந்த 370-வது சட்டப்பிரிவு இந்த பாராளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது நமது அதிர்ஷ்டம். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு-காஷ்மிரில் அமைதி நிலவுகிறது. இன்று பாரதம் 5- வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. உலகின் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாட்டை மாற்ற வேண்டும். இங்குள்ள சிலர் அப்படி நினைக்க மாட்டார்கள்.

ஆனால் இந்தியா முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயரும் என்று உலகம் நம்புகிறது. அனைத்து சட்டங்களும், பாராளுமன்றத்தில் நடக்கும் அனைத்து விவாதங்களும் நமது விருப்பங்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிபாட்டை இன்று மீண்டும் உறுதி படுத்துகின்றோம். என்னிடம் ஒரு ஆலோசனை இருக்கிறது. புதிய பாராளு மன்றத்துக்கு செல்லும் போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் கவுரவம் ஒருபோதும் குறைய கூடாது. இதை பழைய பாராளுமன்ற கட்டிடமாக விட்டு விடக்கூடாது. எனவே நான் கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் ஒப்புக்கொண்டால் இது சம்விதன் சதன் (அரசியல் சாசன மாளிகை) என்று அழைக்க பரிந்துரை செய்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.