;
Athirady Tamil News

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது!!

0

பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் இந்த கட்டிடம் திறக்கப்பட்டாலும் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக அங்கு பணிகள் நடக்க தொடங்கி உள்ளன. இதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், பழைய பாராளுமன்றத்தில் இருந்து புதிய பாராளுமன்றத்துக்கு இடமாற்றம் செய்தனர். மதியம் 12.55 மணிக்கு பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட புத்தக நகலை ஏந்தியபடி முன் வரிசையில் நடந்து செல்ல எம்.பி.க்கள் அனைவரும் தொடர்ந்து சென்றனர்.

புதிய பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததும் முறைப்படி அலுவல்கள் தொடங்கின. பிற்பகல் 1.15 மணிக்கு மக்களவை அமர்வு தொடங்கியது. அதுபோல பிற்பகல் 2.15 மணிக்கு மாநிலங்களவை அமர்வு தொடங்கியது. இதன் மூலம் புதிய பாராளுமன்றத்தில் முறைப்படி பணிகள் தொடங்கி உள்ளன. இனி அனைத்து பாராளுமன்ற கூட்டங்களும் புதிய கட்டி டத்தில்தான் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி தினம் வட மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது.

இதை வெற்றி தரும் தினமாக வட மாநில மக்கள் கருதுகிறார்கள். இதை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று முதல் நாள் எம்.பி.க்கள் வருகையும், பூஜையும்தான் இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் முதல் நாள் கூட்டத்திலேயே வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்பேரில்தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் மசோதாவை இன்றே தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முதல் கட்ட பணிகள் நடந்தன. 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2 ஆண்டுகளில் மிக குறுகிய காலத்தில் இந்த பிரமாண்டமான புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 600 சதுரடி கொண்டது. 3 நுழைவு வாயில்களுடன் கட்டப்பட்டுள்ளது. உள் அலங்காரங்கள் நிறைய செய்யப்பட்டு இருப்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கண்கவர் வகையில் அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.