ஊர் முகப்பில் போர்டு வைப்பதில் இருதரப்பினரிடையே தகராறு- அதிகாரியை முற்றுகையிட்ட கிராம மக்கள்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள குள்ளம்பட்டி ஊராட்சி நரால்சந்தம்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படம் பொறித்த போர்டு ஒன்றை கிராம மக்கள் வைத்துள்ளனர். இதனை மறைக்கும் விதமாக சைதாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் விநாயகர் ஆலயம் என்ற போர்டு ஒன்றை வைத்துள்ளனர். இதற்கு நரால் சந்தம்பட்டி கிராம மக்கள் போர்டு வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் மற்றும் மத்தூர் போலீசார் ஆகியோர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது வட்டாட்சியர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் புதியதாக போர்டு அமைக்க அனுமதி அளித்த நிலையில் அதிகாரியை நரால் சந்தம்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. உடனே பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.