கோவிட் கட்டுப்பாட்டை மீறிய இந்தியருக்கு 2-வார சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி!!
சிங்கப்பூரில் ஸென்கோ வே (Senko Way) பகுதியில் உலகின் முன்னணி நிதி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான லியோங் ஹப் (Leong Hup) செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்தவர் 64 வயதான தமிழ்செல்வம் ராமய்யா. 2021 வருடம் அக்டோபர் மாதம் இவர் மூக்கிலிருந்து நீர் வடியும் தொந்தரவால் அவதிப்பட்டு வந்தார். ஆனால், அந்த நிலையிலும் இவர் அலுவலகம் சென்றார். அங்கு இவரது உடல் அவதியினால் உடனடியாக ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள மேலாளரால் வலியுறுத்தப்பட்டார். அதனை மேற்கொண்டவருக்கு கோவிட் பெருந்தொற்று இருப்பது உறுதியானது.
வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தும் அவர் மீண்டும் பணிக்கு திரும்பினார். அப்போது அங்கு 40 வயது ஆண், 56 வயதான பெண் என இரு வயதில் மூத்த சக பணியாளர்கள் உடன் இருந்தனர். அந்த அறை ஏர்கண்டிஷனிங் வசதி செய்யப்பட்டிருந்தது. அதனால் அவரை வெளியேற சொல்லி மேலாளர் கட்டாயப்படுத்தினார். விருப்பமின்றி புறப்பட்ட தமிழ்செல்வம், அப்போது அங்கிருந்து கிளம்பும் முன் அந்த சக பணியாளர்கள் இருக்கும் திசையை நோக்கி இருமினார். இதனையடுத்து தமிழ்செல்வத்தின் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.
அவர் மீது சக பணியாளர்களின் உடலாரோக்கிய பாதுகாப்பை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. “இது ஒரு விளையாட்டான விஷயமல்ல” என அரசாங்க வக்கீல் ஸ்ருதி போபண்ணா நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்நிலையில் விசாரணையின் முடிவில் 2-வார சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிங்கப்பூரில், 2021 செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.