’’சபைக்குள் ஆடையைக் கழற்ற முடியாது” !!
அண்மையில் ஒரு அமைச்சர் பாராளுமன்றத்திற்குப் பொருத்தமற்ற ஆடையை அணிந்து வருகை தந்ததாகவும் அவர் பாராளுமன்ற அறைக்குள் வைத்து தனது மேலங்கியைக் கழற்றியதாகவும் குற்றம் சுமத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அது அநாகரிகமான செயல் என்பதால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போது ‘அந்த’ அமைச்சர் தனது மேலங்கியைக் கழற்றியதாக நளின் தெரிவித்தார்.
”பாராளுமன்ற சபைக்குள் யாரும் ஆடையைக் கழற்ற இயலாது. ஒருவர் தனது காற்சட்டையைக் அவ்வாறு கழற்றினாலும் அதுவும் பொருத்தமற்ற செயல் தான்.
ஒரு சபாநாயகராக உங்களுக்கும், அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்களுக்கும் பொறுப்பு உள்ளது”, எனத் தெரிவித்ததுடன், அநாகரிகமாக நடந்து கொண்டதால் குறித்த எம்.பி அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது போல் அவரது வாக்கையும் ரத்து செய்யுமாறு தான் கோரிக்கை விடுப்பதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.
”இனிவரும் காலங்களில் அவ்வாறான ஆடையை பாராளுமன்றத்திற்குள் அணிய வேண்டாமென குறித்த உறுப்பினருக்கு நான் அறிவுரை வழங்குகிறேன், அவரின் வாக்கை ரத்து செய்யும் உரிமை எனக்கு இல்லை” என சபாநாயகர் மறுமொழியளித்தார்.