இட்லி விற்று பிழைக்கும் சந்திரயான்-3 பணியாளர்: பொதுத்துறை ஊழியரின் பரிதாப நிலை!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14 அன்று அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந்தது. சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன. அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது.
பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சுமார் 18-மாத காலமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்கள் உட்பட தனது 2800 ஊழியர்களுக்கு சம்பளம் தர இயலவில்லை. இந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் ஒரு தொழில்நுட்ப பணியாளர், மத்திய பிரதேச ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா. இவருக்கு மனைவியும், பள்ளிக்கு செல்லும் 2 மகள்களும் உள்ளனர்.
இவரும் ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால், ஹெச்.இ.சி. சம்பளம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்ததால், நிதி நெருக்கடி அதிகரித்தது. பள்ளியில் மகள்களுக்கு மாதாந்திர கட்டணம் கூட செலுத்த முடியாததால், பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்தது. இதனால் மகள்கள் இருவரும் வீட்டிற்கு அழுது கொண்டே வருவார்கள். நெருக்கடி தாங்க முடியாமல் போகவே, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டித்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்கிறார்.
இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார். காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார். இந்தியர்கள் நிலவை தொட்டதாக பெருமைப்பட்டு கொள்ளும் அதே வேளையில் அதற்காக பாடுபட்டவர்கள் சாலையோரம் வந்து விட்ட பரிதாப நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.