முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்ற தாதியருக்கு 3 மாத சம்பளம் ; விசாரணைகள் ஆரம்பம்!!
முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்ற தாதியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் மூன்று மாத கால சம்பளம் வைப்பிலிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்து, சார்லியத்த கிராமிய வைத்தியசாலைக்கு தாதியொருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போதே சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் அவர், தனது சேவையை விட்டுவிட்டு வெளிநாடு சென்றதாகவும், அவ்வாறு அவர் செல்லும் போது வைத்தியசாலை நிர்வாகத்திற்கோ, மாகாண சபை சுகாதார பணிமானைக்கோ அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தாதியர் வெளிநாடு சென்ற பின்னரும் மூன்று மாதங்களாக, அவரது வங்கிக் கணக்கில் சம்பளமாக சுமார் இரண்டரை இலட்சம் ரூபா நிதி வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் கண்டி, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சார்லியத்த வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் சம்பள கொடுப்பனவு தொடர்பான ஆவணங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் குழுவிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.