சுதந்திரம் நோக்கிய பயணம் !! (கட்டுரை)
இலங்கையின் சுதந்திரத்தை நோக்கிய நகர்வில், சில முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவை சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கான அடிப்படைகளையும் சிங்களத் தேசியவாதத்தின் குணங்குறிகளையும் கொண்டிருந்தன. ஆனால், அக்காலப்பகுதியில் அவை முக்கிய கவனம் பெறவில்லை.
அதிகாரத்தில் இருந்த இலங்கையர்கள் அனைவரும், உயர் மேட்டுக்குடியினராக இருந்தனர். இனத்துவ அடையாளங்களைக் கடந்து, அவர்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது. குறிப்பாக, சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் மேட்டுக்குடி அரசியல் தலைமைகள், தங்கள் இனவுணர்வைக் கடந்த வர்க்கப் பாசத்தைக் கொண்டிருந்தார்கள்.
சிங்கள அரசியல் தலைமைகளுடனான நல்லுறவும் தனிப்பட்ட நட்பும், இனத்துவ முரண்பாடுகளைக் கவலையின்றிக் கடந்து போக அனுமதித்தது. இதற்கு சில உதாரணங்களை நோக்குதல் தகும்.
1936ஆம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்டதான சிங்களவர்களை மட்டுமே கொண்ட அமைச்சர் குழுவின் உருவாக்கமானது, எதிர்கால இலங்கையின் பேரினவாத அரசியல் போக்குக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக இருந்தது. ஆனால், இதை யாரும் பெரிதாகக் கொள்ளவில்லை.
இதில் கவனிப்புக்குரிய விடயம் யாதெனில், தனிச் சிங்களவரைக் கொண்ட மேற்படி அமைச்சரவையை அமைக்கத் திட்டம் தீட்டியதில் சி. சுந்தரலிங்கத்தின் பங்கு பெரிது. ஆனால், பின்னாளில் சிங்கள அரசியல் தலைமைகளின் ஏமாற்றமான நடவடிக்கைகளின் பின்னர், 1956இல் ‘தமிழ் ஈழம்’ என்ற கருத்தை முன்வைத்தவரும் இவரே! அதிலும் மேலாக, 1967இல் தொடங்கிய தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில், சாதித் தடிப்புடையோருக்காக வாதாடியவரும் சி. சுந்தரலிங்கமே ஆவார்.
1943இல் பாரொன் ஜயதிலகவின் மரணத்தையடுத்து, இந்த அமைச்சர் குழுவில் படு பிற்போக்குவாதியானவரும் தனது தந்தையான பொன்னம்பலம் அருணாசலத்திலும் மிக வேறுபட்டவருமான அருணாசலம் மகாதேவா எனும் தமிழர் சேர்க்கப்பட்டார்.
அவர் பெயருக்குத் தமிழராக இருந்தார். 1947இல் இலங்கையில் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அதை முடிவுக்குக் கொண்டுவர, அரசாங்கம் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு அனுமதியளித்தது. பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு வீ. கந்தசாமி என்ற அரசாங்க ஊழியர் பலியானார். கந்தசாமியைச் சுட்டுக் கொன்ற பொலிஸ் படைக்குப் பொறுப்பான உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக அருணாசலம் மகாதேவாவே இருந்தார்.
அதேவேளை, இரண்டாவது சட்டசபையில் சிறுபான்மையினருக்கு எதிரான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்தையும் அங்கிருந்த சிறுபான்மையின பிரதிநிதிகள் அமைதியாக அனுமதித்தனர்.
தீவிர மாக்ஸியவாதியும் மருத்துவப் பட்டதாரியுமான எஸ்.ஏ. விக்கிரமசிங்க, டொனமூர் யாப்பின் கீழ் இலங்கையின் அரச சபைக்காக 1931 நடந்த முதலாவது தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே இடதுசாரியாவார். அவரது துணைவியார் டொறீன் விக்கிரமசிங்க 1932இல் ‘சூரியமல்’ இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர். ‘சூரியமல்’ இயக்கம் கொலனியாதிக்கத்துக்கு எதிராக வலுவான இயக்கமாக உருவானதோடுடு பல சமூகப் பணிகளையும் ஆற்றியது.
நிலப்பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சாதாரண மக்களோடு நெருங்கிப் பழகி, இனத்துவ அடையாளங்களைக் கடந்து, மருத்துவ – சமூக சேவைகளை மேற்கொண்டதால் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவராக எஸ்.ஏ விக்கிரமசிங்க இருந்தார்.
இனத்துவ அடையாளங்களைக் கடந்து, உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் அந்த மக்களை ஒன்றிணைக்கும் இவரது பணி, சிங்களத் தேசியவாதத் தலைமைகளுக்கு முக்கிய சவாலாக இருந்தது.
இரண்டாவது சட்டசபைக்கான தேர்தலில் டி.எஸ் சேனநாயக்க, டி.பி ஜயதிலக ஆகியோரது வழிகாட்டலில் எஸ்.ஏ விக்கிரமசிங்கவுக்கு எதிராக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் எஸ்.ஏ விக்கிரமசிங்க சட்டசபைக்குத் தெரிவாகவில்லை.
இரண்டாவது சட்டசபையில், இலங்கையில் பணியாற்றும் இந்திய தொழிலாளரில் ஒரு பகுதியினரை இந்தியாவுக்குத் திரும்பி அனுப்ப வேண்டும் என்று கோரி, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக சட்டசபைக்குத் தெரிவாகியிருந்த இடதுசாரிகள் என்று தங்களை அழைத்துக் கொண்ட என். எம் பெரேராவும் பிலிப் குணவர்த்தனாவும் வாக்களித்தனர். இந்தியர் மீதான பகைமை உணர்வை, டி.எஸ் சேனநாயக்க தனக்கு வசதியாகப் பயன்படுத்தினார்.
என். எம் பெரேரா, பிலிப் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்தன, றொபேட் குணவர்தன, கொல்வின் ஆர். டி சில்வா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க ஆகியோரைத் தலைமைக் குழுவாகக் கொண்டு, இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாக லங்கா சமசமாஜக் கட்சி 1935இல் உருவானது.
பிற ஆசிய நாடுகளைப் போல, ‘கொம்யூனிஸ்ட்’ என்ற பெயரை கட்சிக்கு சூட்டாமல், சோசலிசத்தை அடையாளப் படுத்தும் ‘சமசமாஜ’ என்ற சொல்லையுடைய பெயர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்துக்கு முந்தைய அரசியல் சூழலில், இனவாத நிலைப்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேர்விட்டன. 1945இல் முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போர், பிரித்தானிய கொலனிகளின் விடுதலைக்கான வாய்ப்புகளை வழங்கியது.
இந்திய விடுதலைப் போராட்டம், பிரித்தானியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதனால் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது தவிர்க்க இயலாததாகியது. ஆனால், இலங்கையில் நிலைமைகள் மிகவும் வேறுபட்டனவாக இருந்தன.
இலங்கையில், சுதந்திரப் போராட்டம் என்றவொன்று நிகழவில்லை. அதற்கு மேலாக சிங்களத் தேசியவாதத் தலைவர்கள் எல்லோருமே கொலனிய விசுவாசிகளாக இருந்தனர். அவர்கள் எந்த நிலையிலும், பூரண சுதந்திரம் கேட்கவில்லை. பிரித்தானிய முடியாட்சிக்கு உட்பட்ட ‘டொமீனியன்’ எனப்படும் சுயாட்சியே, அதிகபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது.
இக்காலப்பகுதியில், சட்டசபையின் கலந்தாலோசனை இல்லாமல் டி.எஸ் சேனநாயக்க அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை பிரித்தானியாவிடம் கோரினார். ஜனநாயக மறுப்பின் ஓர் அத்தியாயமாக இதைக் கருத முடியும். இவ்வாறான செயற்பாடுகளே, இலங்கையின் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடம் இருந்தது. இதன் தொடர்ச்சியே ஜே.ஆர் ஜெயவர்தன உருவாக்கிய ‘நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி’ முறையாகும் என்பதை நினைவிலிருத்தல் தகும்.
டி.எஸ் சேனநாயக்கவின் தலைமையிலான அமைச்சரவை, அரசியலமைப்பு வரைவு ஒன்றை 1944 முற்பகுதியில் தயாரித்தது. அதை ஆராய்வதற்கு ஓர் அரசியலமைப்பு ஆணைக்குழுவை நியமிப்பதற்கு லூயிஸ் மவுண்ட்பற்றன் பிரபு ஆதரவு வழங்கியதால், பிரித்தானிய ஆட்சியாளர்கள் அதற்கு உடன்பட்டனர். எனினும் அந்த ஆணைக்குழுவின் அதிகாரம், சேனநாயக்கவின் அமைச்சர் சபை தயாரித்த அரசியலமைப்பு வரைவுக்கும் அப்பால் சிறுபாண்மையினரது நலன்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இதை டி.எஸ். சேனநாயக்க ஏற்க மறுத்தார்.
இருந்தாலும், 1944 செப்டெம்பரில் சோல்பரி பிரபு தலைமையிலான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
சேனநாயக்கவும் அமைச்சரவை உறுப்பினர்களும் சோல்பரி ஆணைக்குழுவைப் பகிஷ்கரிப்பதாக அறிவித்தனர். ஆனால், பின்கதவால் உரையாடல்களை நிகழ்த்தினர். தனிப்பட்ட முறையில் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர். இதில் சிறுபான்மையினரின் உரிமைகள் ஒரு பேசுபொருளாக இருந்தன.
‘இலங்கை தேசியம்’ என்ற அடிப்படையில் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இருக்க வேண்டும் என்றும் சிறுபான்மையினருக்குச் சலுகைகள் காட்டப்படக் கூடாது என்பதிலும் டி.எஸ் சேனாநாயக்க உறுதியாக இருந்ததாக ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள். 1945இல் டி.எஸ் சேனநாயக்கவுக்கு சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் ஒரு பிரதி, அவை வெளியிடப்பட முன்னரே இலண்டனில் காண்பிக்கப்பட்டது.
டி.எஸ் சேனாநாயக்க, இலங்கை குறித்த அரசியல் முடிவுகள் தனக்கு சார்பாக அமையும் வகையில் பார்த்துக் கொண்டார். அதற்காக அவர், பிரித்தானியாவின் நம்பிக்கைக்குரிய அடியாளாக இருந்தார். கொலனியாதிக்கத்தில் இருந்து பூரண விடுதலையைக் கோரிய கொம்யூனிஸ்டுகள் இலங்கையில் தடை செய்யப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரில், சோவியத் ஒன்றியம் இறங்கிய சூழ்நிலையில் கொம்யூனிஸ்டுகள் மீதான தடை நெகிழ்த்தப்பட்டது. கொம்யூனிஸ்டுகள் 1943இல் இலங்கை தேசிய காங்கிரஸில் இணைந்தனர். அங்கு அவர்கள், எவ்வித இடைக்கால ஏற்பாடுமின்றி, நேரடியாகவே ‘சுதந்திரம்’ என்ற கருத்தை வலியுறுத்தினர். அதற்கு இளம் காங்கிரஸ் உறுப்பினர்களது ஆதரவு இருந்தது.
இதன் விளைவாக, இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர்கள் இடையே இருந்த பழைமைவாதிகள் பதற்றமடைந்தனர். கொம்யூனிஸ்டுகள் அனுமதிக்கப்பட்டதை அடுத்து டி.எஸ் சேனநாயக்க, இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்து விலகினார்.
இதன் தொடர்ச்சியாக, 1946ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியை டி.எஸ் சேனநாயக்க உருவாக்கினார். அதன் முக்கியமான பங்காளிகளாக இலங்கை தேசிய காங்கிரஸ், சிங்கள மகாசபை ஆகிய இரண்டும் இருந்தன. இதற்குள் முஸ்லிம் லீக்கும் உள்ளீர்க்கப்பட்டது. ஆனால் தமிழ்க் காங்கிரஸ் இணைக்கப்படவில்லை. தமிழ்க் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடப்படவுமில்லை.
இவ்வாறு, சிங்கள பெருந்தேசியவாத நோக்கத்துடனேயே சுதந்திரம் நோக்கி இலங்கை நகர்ந்தது. டி.எஸ் சேனநாயக்க டொமினியன் அந்தஸ்துடனான அதிகாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், நடந்தது வேறு!