நியூசிலாந்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!!
நியூசிலாந்தில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடித் தகவல் ஏதும் வெளியாகவில்லை. நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 கிலோ மீட்டர் ஆழத்திலேயே ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிர்வாகம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை. இதனால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலையும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். 5 மில்லியன் மக்களை கொண்ட நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்வதால் நடுங்கும் தீவுகள் (Shaky Isles) என நகைச்சுவைக்காக அழைக்கப்படுகிறது. நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புகள் அடிக்கடி நடைபெறும் பசிபிக் கடலை சுற்றியுள்ள ரிங் ஆஃப் பையர் என அழைக்கப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.