;
Athirady Tamil News

விந்தணு, கருமுட்டை இல்லாமல் விஞ்ஞானிகள் உருவாக்கிய மனிதக் கரு!!

0

விந்தணு, முட்டை அல்லது கருப்பை என எதுவுமே இல்லாமல், ஆரம்பக்கால மனிதக் கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஸ்டெம் செல்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ‘மாதிரி கரு’, இயற்கையாக உருவான 14 நாளைய கருவை ஒத்திருக்கிறது என்று சொல்கிறார்கள் அதை உருவாக்கிய இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள்.

இந்தக் கரு, கர்ப்பப் பரிசோதனை உபகரணங்களில் நேர்மறையான பரிசோதனை முடிவுகளை விளைவிக்கும் ஹார்மோன்களைக்கூட வெளியிட்டது.

நம் வாழ்வின் ஆரம்பத் தருணங்களைப் புரிந்துகொள்வதற்காக தார்மீகச் சிக்கலற்ற ஒரு வழியைக் கண்டடைவதே இத்தகைய கரு மாதிரிகளை உருவாக்குவதன் நோக்கம்.

ஒரு விந்தணு, கருமுட்டையோடு இணைந்த பிறகான முதல் வாரங்கள், அது வியத்தகு மாற்றங்களுக்கு உட்படும். சில செல்களின் தொகுப்பாக இருப்பதில் இருந்து, ஸ்கேனில் அடையாளம் காணக்கூடிய ஒரு வடிவமாகும் வரை.

இந்தக் காலகட்டம், கருச்சிதைவு மற்றும் பிறப்புக் குறைபாடுகளைப் பற்றி அறிவதற்குரிய முக்கியமான ஆதாரம். ஆனால் இது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

“இது விமானத்தில் உள்ள ஒரு கருப்புப் பெட்டியைப் போன்றது. இதைப் பற்றி நாம் இதுவரை மிகவும் குறைவாகவே அறிந்துள்ளோம்,” என்கிறார் வைஸ்மேன் அறிவியல் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேக்கப் ஹன்னா.

ரசாயனங்களைப் பயன்படுத்தி, இந்த ஸ்டெம் செல்கள் மனிதக் கருவின் ஆரம்பக் கட்டங்களில் காணப்படும் நான்கு வகையான உயிரணுக்களாக உருவாக்கப்பட்டன.

மனிதக் கரு பற்றிய ஆராய்ச்சி சட்டரீதியாகவும், தார்மீகரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சிக்கலானது. ஆனால் தற்போது இயற்கையான மனிதக் கருவின் மாதிரியைப் பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் துறை வேகமாக வளர்ந்து வருகிறது.

நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, ஆரம்பக்கால மனிதக் கருவில் வெளிப்படும் அனைத்து முக்கிய கட்டமைப்புகளையும் பிரதிபலிக்கும் முதல் ‘முழுமையான’ கரு மாதிரி என இந்த இஸ்ரேலிய ஆராய்ச்சிக் குழு விவரிக்கிறது.

“இது 14 நாட்களான ஒரு மனிதக் கருவின் மாதிரிப் படம்,” என்கிறார் பேராசிரியர் ஹன்னா. இதுபோன்ற ஒன்று உருவாக்கப்படுவது இதுதான் முதன்முறை என்றும் அவர் கூறுகிறார்.

விந்தணு மற்றும் கருமுட்டைக்குப் பதிலாக, ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல்களை உபயோகித்தனர். அவை உடலில் உள்ள எந்த வகையான திசுக்களாகவும் மாறும் திறனைப் பெறும் வகையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன.

ரசாயனங்களைப் பயன்படுத்தி, இந்த ஸ்டெம் செல்கள் மனிதக் கருவின் ஆரம்ப கட்டங்களில் காணப்படும் நான்கு வகையான உயிரணுக்களாக உருவாக வைக்கப்பட்டன.

இவற்றில் மொத்தம் 120 செல்கள் ஒரு துல்லியமான விகிதத்தில் கலந்த பிறகு, விஞ்ஞானிகள் பொறுத்திருந்து நடப்பதைக் கவனித்தனர்.

14 நாட்களான மனிதக் கருவுடன் ஒப்பிடும் வரை இந்தக் கரு மாதிரிகள் வளர அனுமதிக்கப்பட்டன.

இந்தக் கலவையில் சுமார் 1%, மனிதக் கருவை ஒத்த, ஆனால் மனிதக் கரு அல்லாத ஓர் அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளும் பயணத்தைத் தன்னிச்சையாகத் தொடங்கியது.

“அத்தனை புகழும் செல்களையே சேரும். கலவை சரியானதாக இருந்து, சரியான சூழலும் இருந்தால் செல்கள் தங்கள் வேலையைத் தானாகத் தொடங்கும். இது ஒரு அற்புதமான நிகழ்வு,” என்று பேராசிரியர் ஹன்னா கூறுகிறார்.

பதினான்கு நாட்களான மனிதக் கருவுடன் ஒப்பிடும் அளவு வரை வளர்வதற்கு இந்தக் கரு மாதிரிகள் அனுமதிக்கப்பட்டன. பல நாடுகளில், இது சாதாரண கரு ஆராய்ச்சிக்கான சட்டபூர்வமான குறைந்தபட்சக் காலகட்டம். அதாவது, 14 நாட்களுக்கு மேல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மனிதக் கருவை வளரவிடக்கூடாது.

இந்தக் கருவின் 3D மாதிரியில் நஞ்சுக்கொடியாக மாறும் ட்ரோபோபிளாஸ்ட், கருவைச் சூழ்ந்திருக்கிறது. குழந்தைக்கு ஊட்டச்சத்துகளை மாற்ற தாயின் இரத்தத்தை நிரப்பும் லாகுனா எனப்படும் குழிகள் இதில் அடங்கும்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் சில பாத்திரங்களைக் கொண்ட மஞ்சள் கருப்பை, மேலும் ஒரு பைலாமினர் கரு வட்டு (bilaminar embryonic disc) ஆகியவையும் காணப்படுகின்றன.

‘மிக முக்கியமான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும்’

இந்த செயற்கைக் கரு மாதிரிகள் பல்வேறு வகையான செல்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதையும், உடலின் உறுப்புகளை உருவாக்குவதற்கான ஆரம்பப் படிகளைக் காணவும், மரபுவழி அல்லது மரபணு நோய்களைப் புரிந்துகொள்வதற்கும் தங்களுக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஆரம்பக்கால நஞ்சுக்கொடி செல்கள் சூழ்ந்திருந்தால் தவிர, கருவின் பிற பகுதிகள் உருவாகாது என்பதை இந்த ஆய்வு காட்டியிருக்கிறது.

சில கருக்கள் ஏன் தோல்வியடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதன் மூலமும், கர்ப்ப காலத்தில் மருந்துகள் பாதுகாப்பானவையா என்பதைச் சோதிக்க மாதிரிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், சோதனைக் கருத்தரித்தல் (IVF) வெற்றி விகிதங்களை மேம்படுத்துவதையும் இந்த ஆராய்ச்சி கண்டறியும்.

ஃபிரான்சிஸ் க்ரிக் இன்ஸ்டிடியூட்டில் கரு வளர்ச்சியை ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் ராபின் லவல் பேட்ஜ், இந்தக் கரு மாதிரிகள் ‘இயல்பான தோற்றம் கொண்டிருப்பதாக’ கூறுகிறார்.

“இது நன்றாக இருக்கிறது, நன்றாகச் செய்யப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் திருப்திகரமானதாக இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த ஆராய்ச்சியில் தற்போதைய 99% தோல்வி விகிதம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். இந்தக் கரு மாதிரியின் செல்கள் பெரும்பாலான நேரங்களில் தம்மை இணைத்துக் கொள்ளத் தவறினால், கருச்சிதைவு அல்லது கருவுறாமையில் என்ன தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும்.

14 நாள் கட்டத்தைக் கடந்தும் ஆய்வகங்களில் கருவை வளர்க்க முடியுமா என்ற கேள்வியையும் இந்த ஆராய்ச்சி எழுப்புகிறது.
தார்மீகக் கேள்விகள்

பதினான்கு நாட்கள் என்ற கட்டத்தைக் கடந்தும் ஆய்வகங்களில் கருவை வளர்க்க முடியுமா என்ற கேள்வியையும் இந்த ஆராய்ச்சி எழுப்புகிறது.

கரு மாதிரிகள் சட்டப்பூர்வமாக கருவிலிருந்து வேறுபட்டவை என்பதால், பிரிட்டனில்கூட இது சட்டவிரோதமானது அல்ல.

“சிலர் இதை வரவேற்பார்கள். ஆனால் மற்றவர்கள் இதை விரும்ப மாட்டார்கள்,” என்று பேராசிரியர் லவல்-பேட்ஜ் கூறுகிறார்.

இந்த மாதிரிகள் ஓர் உண்மையான கருவுக்கு நெருக்கமாக வருவதால், அவை அதிக தார்மீகக் கேள்விகளையும் எழுப்புகின்றன.

அவை சாதாரண மனிதக் கருக்கள் அல்ல, அவை கரு மாதிரிகள், ஆனால் அவை அவற்றுடன் மிக நெருக்கமாக உள்ளன.

“எனவே ஒரு சாதாரண மனிதக் கருவைப் போல நீங்கள் அவற்றைப் பார்க்க வேண்டுமா அல்லது சற்றுத் தளர்வாக இருக்க முடியுமா?”

போம்போ ஃபாப்ரா பல்கலைக்கழகத்தின் பரிசோதனை மற்றும் சுகாதார அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் அல்போன்சோ மார்டினெஸ் அரியாஸ், இது ‘மிக முக்கியமான ஆராய்ச்சி’ என்று கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி, ஆய்வகத்தில் ‘முதன்முறையாக, ஸ்டெம் செல்களில் இருந்து [ஒரு மனிதக் கருவின்] முழுமையான கட்டமைப்பை உண்மையாக உருவாக்கி மனித உடலின் வடிவம் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கான கதவுகளைத் திறந்திருக்கிறது,’ என்று அவர் கூறுகிறார்.

இந்த செயற்கைக் கரு மாதிரிகளைப் பயன்படுத்தி கர்ப்பத்தை அடைவது நெறிமுறையற்றது, சட்டவிரோதமானது மற்றும் உண்மையில் சாத்தியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.