’செந்திலின் அறிக்கை கோழைத்தனமானது’ !!
இனமோதலை ஏற்படுத்தும் சூட்சுமம் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது என்று தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்று அரசாஙகத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற கிழக்கின் ஆளுநர் கோழைத்தனமான அறிக்கையை விட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்த அவர்,
“யுத்தத்தை சமாதானமாக முடிக்க வேண்டும் என போராடி உயிர்நீத்த திலீபனை நினைவு கூறுகின்ற ஊர்வலத்துக்கு நாட்டிலுள்ள உயரிய சபையான இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமாக தாக்கப்படுவதையும் அதனை பொலிஸார் பார்த்துக் கொண்டிருப்பதையும் நாங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது.
அஹிம்சாவாதியை நினைவு கூர்ந்த ஒருவரை தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத முதுகெலும்பு இல்லாத கிழக்கு ஆளுநர் முறையற்றது என கூறியிருப்பது கோழைத்தனமானது. அவர் தன்னுடைய அறிவிப்பை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நாட்டில் தற்போது நடைபெறும் அத்துமீறல்கள் சமூக ஊடகங்களின் மூலமாகவே மக்களுக்கு வெளிக்கொண்டு வந்துக் கொண்டிருக்கிறது. செல்வராசா கஜேந்திரனின் தாக்குதலையும் அவ்வாறே நாம் அறிந்துக் கொண்டோம்.
இந்த நாட்டிலுள்ள குடிமக்கள் தமது உரிமையை கேட்டால் அவர்களை பயங்கரவாதி என அடையாளப்படுத்தும் வேலைத்திட்டத்தை பயங்கரவாத சட்டத்தின் மூலம் ஏற்படுத்த அரசாங்கம் பார்க்கிறது” என்றார்.